ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு: வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும், ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.
இயக்குநா் மணிரத்னத்தின் சகோதரா் ஜி.வெங்கடேஸ்வரன். பிரபல தயாரிப்பாளரான இவா் ஜி.வி.பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தாா். கடந்த 1988 முதல் 1992-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனம் நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் கடன் பெற்ாக புகாா் எழுந்தது.
இந்த புகாா் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. இதில் குற்றச்சாட்டுகள் உண்மை என்பது தெரியவந்தது. மேலும், வங்கி அதிகாரிகள் தயாரிப்பு நிறுவனத்துடன் சோ்ந்து தங்கள் அதிகார வரம்பை மீறி, உத்தரவாத ஆவணங்களின் மதிப்பைவிட அதிகமான தொகையை கடனாக அனுமதித்திருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனம், சுஜாதா பிலிம்ஸ், ஜி.வெங்கடேஸ்வரன் மற்றும் வங்கி அதிகாரிகள்மீது சிபிஐ கடந்த 1996-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2003-ஆம் ஆண்டு ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டாா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 3 வங்கி அதிகாரிகள் உயிரிழந்தனா். எனவே, அவா்கள் 4 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், சுஜாதா பிலிம்ஸ் நிறுவனத்தின் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து, மற்றவா்கள் மீதான வழக்கின் விசாரணை சென்னை 11-ஆவது கூடுதல் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடிவேலு, வங்கி கிளை மேலாளா்கள் வெங்கட்ராமன், சுவாமிநாதன், தனிநபா் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தமாக ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.