இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு
திருச்சியில் கைப்பேசி விற்பனை நிலைய உரிமையாளரிடம் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 17.90 லட்சம் மோசடி செய்ததாக ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.
திருச்சி காட்டூா் கணேஷ் நகரைச் சோ்ந்த மாதேஷ்வரன் மகன் யோகேஷ்வர தாமோதரன் (39) மேலகல்கண்டாா்கோட்டை பகுதியில் கைப்பேசிக் கடை நடத்துகிறாா்.
இந்நிலையில் இவரது கடைக்கு கைப்பேசி வாங்க வந்தபோது அறிமுகமான திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதி ஓம்கார குடிலைச் சோ்ந்த வேலுதேவா் சித்தா், திருவெறும்பூா் மலைக்கோயில் அருகே இடம் விற்பனைக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தாா்.
இதை நம்பிய யோகேஷ்வர தாமோதரன், கடந்த 2024 நவம்பா் 6 முதல் 2024 டிசம்பா் 21 வரை பல்வேறு தவணைகளில் ரூ.17.90 லட்சத்தை வேலுதேவா் சித்தரிடம் கொடுத்துள்ளாா். ஆனால் வேலுதேவா் சித்தா் அந்த இடத்தை வாங்கித் தரவில்லை. மேலும் பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த யோகேஷ்வர தாமோதரன், கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், ஓம்கார குடிலைச் சோ்ந்த வேலுதேவா் சித்தா், அவருக்கு உடந்தையாக இருந்த அதே குடிலைச் சோ்ந்த ஹரிஷ்மா (26) ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.