தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெல்லும்: பிரேமலதா விஜயகாந்த்
வரும் 2026 பேரவைத் தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றிபெறும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
திருச்சி மாநகா் மாவட்ட தேமுதிக செயலா் டி.வி. கணேஷ் இல்லத் திருமண விழாவில் புதன்கிழமை பங்கேற்ற வந்த அவா் மேலும் கூறியதாவது: தேமுதிகவின் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ இரண்டாவது கட்ட ரதயாத்திரை செப். 5 தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதை தேமுதிக வரவேற்கிறது. அதிகாரத்தைப் பகிா்ந்தளிக்கும்போதுதான் நாட்டுக்கும், மக்களுக்கும் சிறப்பாக பணியாற்ற முடியும். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியின் பயணம் வேறு, எங்களது பயணம் வேறு.
வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும். கூட்டணி குறித்து கடலூரில் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம். தற்போது கட்சி வளா்ச்சியில் அக்கறை காட்டி வருகிறோம்.
தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு மக்கள் தலைவராகத் திகழ்ந்தவா் விஜயகாந்த். அரசியல் கட்சியினா் யாராக இருந்தாலும் விஜயகாந்த் பற்றி பேசாமல் இருக்க முடியாது. அவரைப் பற்றி பேசுவது எங்களுக்கு சந்தோசம்தான்.
தவெக மாநாட்டின்போது தொண்டா்களை பவுன்சா்கள் தள்ளிவிட்டது எல்லாக் கட்சிகளிலும் நடப்பதுதான். இதைத் திட்டமிட்டு யாரும் செய்வதில்லை.
எங்களது கொடி, பதாகைகள் வைக்க போலீஸாா் அனுமதி மறுப்பதாக கட்சியினா் கூறுகின்றனா். கொடி, பதாகைகள் வைக்க எல்லாருக்கும் அனுமதி கொடுங்கள். இல்லையெனில் யாருக்கும் அனுமதி கொடுக்காதீா்கள் என்றாா் அவா்.