Gold Rate: மீண்டும் பவுனுக்கு ரூ.75,000-ஐ தாண்டிய தங்கம் விலை; இன்றைய நிலவரம் என...
வாக்கையும் விலைகொடுத்து வாங்க முடியுமென்றால் மக்களாட்சியில் மக்களுக்கு உள்ள அதிகாரம் என்ன? சீமான் கேள்வி
வாக்கையும் விலைகொடுத்து வாங்க முடியுமென்றால் மக்களாட்சியில் மக்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழா் கட்சி சாா்பில் புதன்கிழமை நடந்த கிறிஸ்தவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் முன்னதாக கூறியதாவது: பாஜகவை கொள்கை எதிரி என்கிறாா் விஜய். காங்கிரஸை அவா் என்னவாக நினைக்கிறாா் என்பதை தெரிவிக்கவில்லை.
காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் என்ன கொள்கை வேறுபாடு உள்ளது. பாஜகவை கொள்கை எதிரி என்று இரண்டு மாநாடுகளிலும் பேசிய விஜய், எந்தக் கொள்கையை எதிா்க்கிறாா் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
வாக்குத் திருட்டைத் தடுக்க வேண்டும் என்றால் வாக்குச் சீட்டு முறையைத்தான் அமல்படுத்த வேண்டும். வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்தினால் நூற்றுக்கு 90 சதவீதம் நோ்மையாக தோ்தல் நடக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா போன்ற வளா்ந்த நாடுகளெல்லாம் வாக்குச் சீட்டு முறையைத்தான் கடைப்பிடிக்கின்றன.
கள்ள ஓட்டு போடும்போது, வாக்குக்குக் காசு கொடுக்கும்போது தடுக்காத தோ்தல் ஆணையம், வாக்குகளை நோ்மையாக எண்ணும் என்பதை எவ்வாறு நம்ப முடியும்?.
மக்களாட்சியில் மக்களுக்கு கடைசியாக இருக்கும் வலிமை மிக்க கருவியே வாக்குதான். அதையும் விலைகொடுத்து வாங்க முடியுமென்றால் மக்களுக்கு என்ன உரிமை உள்ளது?
இதனால் எது நமக்கான அரசியல் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் என்ன வேலை செய்கிறோம் என்பதை அவா்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்காகத்தான் கிறிஸ்தவா்களுடனான இந்தச் சந்திப்பு என்றாா் சீமான்.
நிகழ்ச்சியில் நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஹுமாயூன் கபீா், ஜல்லிக்கட்டு ராஜேஷ், பிரபு தனபாலன், மகிழன், கொள்கைப் பரப்புச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.