``அமெரிக்காவின் 50% வரி விதிப்பு; ரூ.500 கோடி இழப்பு'' - பின்னலாடை நிறுவனங்கள் சொல்வதென்ன?
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம்
இந்தியாவின் பின்னலாடை உற்பத்தியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு சுமார் ரூ. 45 ஆயிரம் கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து அதிக அளவில் பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் 68 சதவீத பின்னலாடைகள் திருப்பூரில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக ஏற்றுமதியில் சுமார் 30 சதவீத பின்னலாடைகள் திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நாளொன்றுக்கு ரூ. 500 கோடி இழப்பு
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தற்போது, இந்த 25 சதவீத வரியை மேலும் 25 சதவீதம் சேர்த்து, மொத்தம் 50 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, அமெரிக்க சந்தையை மையமாக வைத்து இயங்கி வரும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், இந்த அறிவிப்பால் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஏற்கெனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு 25 சதவீத வரி இருந்து வந்த நிலையில், தற்போது அது 50 சதவீத வரியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க வர்த்தகர்களிடம் இருந்து ஏற்கெனவே பெறப்பட்ட ஆர்டரின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளை பழைய விலையில் விற்பது சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டதால், அந்த ஆடைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், நாளொன்றுக்கு ரூ. 500 கோடி வரை இழப்பைச் சந்திக்கும் நிலைக்கு திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறுகையில்:
"அமெரிக்காவின் இந்த 50 சதவீத வரி விதிப்பால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் ஆர்டர் கொடுக்கப்பட்ட ஒரு ஆடை 10 டாலருக்கு விற்க முடியும் என்றால், 50 சதவீத வரி விதிப்புக்குப் பிறகு அதே ஆடை 16 முதல் 18 டாலருக்கே விற்க முடியும். இதனால், பல கோடி மதிப்பிலான ஆடைகள் தேக்கம் அடைய வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பு
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால், திருப்பூரில் உள்ள சில பின்னலாடை நிறுவனங்கள் நேரடியாகவும், சில நிறுவனங்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படும். இந்த வரி விதிப்பால் இரண்டு பக்கமும் ஏற்படும் இழப்புக்கு தீர்வு காண இரு நாட்டு அரசுகளும் முன்வர வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு, பின்னலாடைத் துறையில் நமக்கு போட்டியாக உள்ள சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. இதனால், ஆடைகள் உற்பத்தி பாதியாக குறைவதுடன், திருப்பூரின் ஏற்றுமதி கடுமையான சரிவைச் சந்திக்கும்.
புதிய நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தம் மேற்கொள்வதோடு, அமெரிக்காவுடன் இந்த வரியை நீக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
ஏற்கெனவே ஜிஎஸ்டி, கொரோனா, பணமதிப்பிழப்பு போன்றவற்றால் கடுமையான சிக்கல்களைச் சந்தித்து வருகிறோம்.
தற்போது, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பின்னலாடைத் துறையை நம்பி உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்" என்றனர்.
சந்தைகளை பாதிக்கும் காரணிகள்
இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் குமார் பேசுகையில்:
"திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதியாளர்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.
1.முற்றிலும் அமெரிக்காவை மட்டுமே சார்ந்து இயங்கும் நிறுவனங்கள்.
2.அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை சார்ந்து இயங்கும் நிறுவனங்கள்.
3. அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள்.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால், அமெரிக்காவை மட்டும் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் நேரடியாக கடுமையான பாதிப்பைச் சந்திக்கும்.
அமெரிக்கா மற்றும் இதர சந்தைகளை சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் குறைந்த அளவிலான பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.
அமெரிக்காவை சாராத நிறுவனங்களும் சிறிய அளவில் பாதிக்கப்படும். ஏனெனில் மேற்சொன்ன இருதரப்பும் அமெரிக்காவை தவிர்த்து மற்ற சந்தைகளை நோக்கிச் செல்லும்போது போட்டி உருவாகி விலை குறைப்பு மற்றும் ஆர்டர்கள் பிற நிறுவனங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் உருவாகும்.

பொருளாதார இழப்பு
அதுமட்டுமில்லாமல், ஆண்டுக்கு சுமார் ரூ. 2,000–2,500 கோடி அளவுக்கான பொருளாதார இழப்பும், ரூ. 5,000–7,000 கோடி அளவிலான வர்த்தக இழப்பும் நேரிட வாய்ப்பு அதிகம் உள்ளது.
24 மணி நேரமும் இயங்கி வரும் பின்னலாடை நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை குறைக்கத் தொடங்கி, பின் வேலை இழப்பு வரை செல்லும் அபாயமும் உள்ளது.
இது திருப்பூர் பின்னலாடைத் துறையை மட்டும் பாதிக்காது; ஒட்டுமொத்த மாவட்டத்தின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பையும் கேள்விக்குறியாக்கிவிடும்.
தொழிலாளர்கள் வேலை இழப்பதும், தாக்குப்பிடிக்க இயலாத தொழிற்சாலைகள் மூடப்படுவதும், தொழில் பின்னடைவு காரணமாக வரி வசூல் பாதிப்பும், வங்கிகளில் வாரா கடன்கள் அதிகரிப்பதும் போன்றவை நிகழும் அபாயம் உள்ளது.
மத்திய அரசு அமெரிக்க அரசுடன் பேசி விரைவில் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்," என்றார்.