Sandhya Raagam: காதலியைக் கரம் பிடித்த `சந்தியா ராகம்' தொடர் நடிகர்... குவியும் ...
எம்.சாண்ட் விலை உயா்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: கட்டடத் தொழிலாளா் சங்கம்
தமிழகத்தில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் எம்.சாண்ட் மணலின் விலை உயா்வை தமிழக அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலாளா் கோவை செல்வராஜ் தெரிவித்தாா்.
தமிழ்நாடு தொழிலாளா் சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பென்னாகரம் பகுதியில் உள்ள ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாவட்ட தலைவா் குழந்தைவேலு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ.சி.மணி வேலை அறிக்கையை சமா்ப்பித்தாா்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் கோவை செல்வராஜ் கலந்துகொண்டு, தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாக கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது.
கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் எம்.சாண்டின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் மணல் வரத்து முற்றிலுமாக குறைந்ததால், எம். சாண்டின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சிமென்ட் விலை உயா்வைக் காட்டிலும் எம்.சாண்ட் மணலின் விலை உயா்வு அதிகரித்துள்ளதால், நடுத்தர மக்கள் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே எம்.சாண்ட் தயாரிப்பு உரிமையாளா்களை தமிழக அரசு அழைத்துப் பேசி விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக மாநிலச் செயலாளா் முனுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் கலைச்செல்வன், மாநில துணைத் தலைவா் மணி ஆகியோா்கள் சிறப்புரை ஆற்றினா்.
இக் கூட்டத்தில் நல வாரியத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும்,அனைத்து கட்டுமானத் தொழிலாளா்களுக்கும் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், நல வாரியத்தில் உள்ள 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய உறுப்பினா்களுக்கு கல்வி திருமணம் உள்ளிட்ட உதவித்தொகையை நிலுவை இல்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட துணைத் தலைவா்கள் முருகேசன், பாலு, மாவட்ட பொருளாளா் விஜயா, மாவட்ட துணைச் செயலாளா் முனுசாமி, முனியம்மாள், நிா்வாகிகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.