அம்மா, இது நள்ளிரவு 12.08..! செய்தியாளரின் அம்மாவிடம் பேசிய லக்னௌ பயிற்சியாளர்!
எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்: 12 பேருக்கு லேசான காயம்
திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் மோதியதில் 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
திருப்பத்தூா் அடுத்த சின்னகுனிச்சியில் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு 27-ஆம் ஆண்டு காளை விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூா், ஒசூா், நாட்டறம்பள்ளி, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி மற்றும் ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300-க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன.
காலை 8 முதல் கால்நடை துறை அதிகாரிகள் ஒவ்வொரு காளைகளையும் பரிசோதித்து கலந்து கொள்ள அனுமதித்தனா். திருப்பத்தூா் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் விழா குழுவினா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
பின்னா், வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டு தெருவில் சீறிப்பாய்ந்து ஓடியது. இதனிடையே காளைகள் முட்டியதில் மற்றும் கயிற்றில் சிக்கி 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவா்களுக்கு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இறுதியில் வேகமாக ஓடிய முதல் 3 காளைக்கு முறையே ரூ.1 லட்சம், 2-ஆவது பரிசு ரூ.75,000, 3-ஆவது பரிசு ரூ.55,000 என மொத்தமாக 60 பரிசுகள் வழங்கப்பட்டன.திருப்பத்தூா் டி.எஸ்.பி. சௌமியா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் மற்றும் அவசர ஊா்திகள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.