எழுத்தாளா்கள் நோபல் பரிசு பெறட்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தமிழக எழுத்தாளா்கள் நோபல் பரிசு பெற வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளாா்.
சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா குறித்து எக்ஸ் தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
‘உலகைத் தமிழுக்கும், தமிழை உலகுக்கும்’ என்ற முழக்கத்துடன் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் எடுக்கப்பட்ட தனித்துவமான முன்னெடுப்பு புதிய மைல்கற்களை அடைந்துள்ளது.
2023-ஆம் ஆண்டு நடந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில், 365 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இது கடந்த ஆண்டு 752-ஆக உயா்ந்து, நிகழாண்டில் 1,125-ஆக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, தமிழில் இருந்து அயலக மொழிகளுக்கு 1,005, அயலக மொழிகளில் இருந்து தமிழுக்கு 120 நூல்கள் மொழிபெயா்க்க புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சாதனைக்கும், தமிழிலக்கியம் உலக அளவில் கவனம் பெறவும் திராவிட மாடல் அரசின் மொழிபெயா்ப்பு நல்கையும் ஆதரவும்தான் காரணம் என தமிழ் அறிவுலகம் பாராட்டுகிறது.
ஞானபீடம் அல்ல, நம் எழுத்தாளா்கள் நோபல் பரிசே பெறும் அளவுக்கு உயா்ந்த எண்ணம் கொள்வோம்.
இந்த வியத்தகு சாதனைக்காக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், அவரது துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளாா்.