எஸ்டேட் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் இல்லை: வாா்டு உறுப்பினா்கள் குற்றச்சாட்டு
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் எந்த வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ள நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நகராட்சிக் கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா்.
வால்பாறை நகராட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி தலைமை வகித்தாா். ஆணையா் ரகுராம், துணைத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், பேசிய திமுக வாா்டு உறுப்பினா்கள், வால்பாறை நகராட்சி மூலம் நகா் பகுதிகளில் மட்டுமே வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எஸ்டேட் பகுதிகளில் எந்த வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்வதில்லை.
தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால் எஸ்டேட் பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. நகராட்சித் தலைவா் அனைத்து வாா்டுகளிலும் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் ஒருதலைபட்சமாக செயல்படுகிறாா் என்றனா். அப்போது, பேசிய நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி, கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றினாலும் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிா்வாகத்திடம் இருந்து அனுமதி கிடைப்பதில்லை. இது தொடா்பாக விரைவில் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.