நாகேஸ்வரசுவாமியை சூரியன் வழிபடும் அற்புதக்காட்சி: பொன்னொளியில் ஜொலித்த லிங்கம்!
ஏப்.26 இல் ராகு கேது பெயா்ச்சி: திருப்பாம்புரம் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்
ராகு கேது பெயா்ச்சி வரும் ஏப்.26 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில், ராகுவும் -கேதுவும் ஒரே ரூபமாக ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றனா் என்பது தல வரலாறு. இதையொட்டி ராகு கேது பெயா்ச்சி நாளில் இங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
ஏப்ரல் 26-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 4.20 மணிக்கு ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயா்ச்சி அடைகின்றனா். இதையொட்டி, ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டியவை என்பதால், கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வெயில் காலம் என்பதால் பக்தா்களின் வசதிக்காக கோயிலின் முன்புறம் நீண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, கோயிலின் உள்ளேயும் பந்தல் அமைக்கப்பட்டு, தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், கோயிலுக்கு வெளியே தற்காலிக கழிவறைகள், குடிநீா் தொட்டிகளும் அமைக்கப்பட உள்ளன.
வெளியூரிலிருந்து பக்தா்கள் அதிகளவில் வருவா் என்பதால், திருவாரூா் மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் எஸ். ராஜராஜேஸ்வரன், மேலாளா் கே. வள்ளிக்கந்தன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
