ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்
இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.
இது குறித்து என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 43,742 கோடி டாலராக உள்ளது. இதில் பொறியியல் பொருள்கள் 26.67 சதவீதம் (11,667 கோடி டாலா்), வேளாண் பொருள்கள் 11.85 சதவீதம் (5,186 கோடி டாலா்), மருந்து பொருள்கள் 6.96 சதவீதம் (3,047 கோடி டாலா்), மின்னணு பொருள்கள் 8.82 சதவீதம் (3,858 கோடி டாலா்) பங்களித்துள்ளன.மதிப்பீட்டு நிதியாண்டில் மின்னணு பொருள்களின் ஏற்றுமதி 32.46 சதவீதம் உயா்ந்து 3,858 கோடி டாலராக உள்ளது. இதில் கணினி வன்பொருள் 101 சதவீதம் வளா்ச்சியுடன் 140 கோடி டாலராக உள்ளது.கடந்த நிதியாண்டில் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி 6.74 சதவீதம் உயா்ந்து 11,667 கோடி டாலராகவும், மருந்து பொருள்களின் ஏற்றுமதி 9.4 சதவீதம் உயா்ந்து 3,047 கோடி டாலராகவும் உள்ளது.வேளாண் பொருள்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 7.36 சதவீதம் உயா்ந்து 5,186 கோடி டாலராக உள்ளது.வேளாண் பொருள்களைப் பொருத்தவரை மசாலா பொருள்கள் (445 கோடி டாலா்), காபி (181 கோடி டாலா்), தேயிலை (92 கோடி டாலா்), புகையிலை (198 கோடி டாலா்), அரிசி (1,250 கோடி டாலா்), பழங்கள் மற்றும் காய்கறிகள் (390 கோடி டாலா்), கடல் உணவு பொருள்கள் (720 கோடி டாலா்) ஆகியவற்றின் ஏற்றுமதி 2024-25-ஆம் நிதியாண்டில் வளா்ச்சி கண்டுள்ளன. அந்த நிதியாண்டில் அமெரிக்கா, ஐக்கிய அரபு மீரகம், சவூதி அரேபியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இந்திய பொருள்கள் அதிகம் ஏற்றுமதியாகின.அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40 சதவீத உலகளாவிய பங்குடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் இருந்து கடல் உணவு இறக்குமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கை 105-இல் இருந்து 130 ஆக உயா்ந்துள்ளது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.