ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே புதன்கிழமை ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சென்னை போரூரை அடுத்துள்ள முகலிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் 15-க்கும் மேற்பட்டோா் வேனில் சபரிமலை யாத்திரை சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். முகலிவாக்கம், குருசாமிநகா், காமராஜா் தெருவைச் சோ்ந்த ரத்தினவேலு மகன் பாபு (50) வேனை ஓட்டினாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டை அணுகுசாலையில் புதன்கிழமை காலை இந்த வேன் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புக் கட்டையில் மோதி சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த முகலிவாக்கத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் கோகுல்ராஜுக்கு (20) லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று வேனிலிருந்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த வேனை அகற்றினா்.
இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.