Vikatan Digital Awards 2025 Redcarpet Part 5 | Vijayvaradharaj, Preethi Asrani, ...
ஐ.நாவில் நெதன்யாகு உரை! கூட்டாக வெளிநடப்பு செய்த தலைவர்கள்!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது உரையைத் தொடங்கிய உடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைகளை இனப்படுகொலை எனக் குறிப்பிட்டும், பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய வேண்டுமெனவும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தங்களது உரையில் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று (செப். 26) நடைபெற்ற ஐ.நா.வின் அவைக் கூட்டத்தில் உரையாடினார். அப்போது, அவர் தனது உரையைத் துவங்கியதுடன், அங்கிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவையை விட்டு வெளியேறினர்.
பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையில் பங்கெடுக்க விரும்பவில்லை என்பதாலும், பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் அவர்கள் வெளிநடப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.
இத்துடன், இஸ்ரேல் பிரதமரின் உரையின்போது ஒன்றாக வெளியேற வேண்டும் என அவர்கள் அனைவரும் முன்கூட்டியே திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஐ.நா.வின் இந்தப் பொது அவைக் கூட்டத்தில் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவத் தலைமைத் தளபதி சந்திப்பு!