தவெக தலைவர் விஜய் பிரசாரம் டிசம்பர் வரையல்ல! அட்டவணையில் திடீர் மாற்றம்!!
ஐ.நா: இஸ்ரேல் பிரதமர் பேசுகையில் எழுந்து சென்ற பிரதிநிதிகள்; நெதன்யாகு பேசியதென்ன?
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நேற்று உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதை எதிர்த்துப் பேசினார்.
ஐரோப்பிய நாடுகளின் நடவடிக்கை "அவமானகரமானது" என்றும் "யூதர்களைக் கொன்றதன் பலன்" என்றும் அவர் தெரிவித்தார்.









இஸ்ரேலுக்கு எதிர்ப்பு
ஐநாவுக்கு வெளியே டைம்ஸ் சதுக்கத்தில் காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. உள்ளே நெதன்யாகு பேசுவதற்காக மேடையை அடைந்தபோது பல பிரதிநிதிகள் அரங்கிலிருந்து வெளியேறினர். பெருமளவிலான அரங்கம் காலியாக இருக்க, உரையாடத் தொடங்கினார் இஸ்ரேல் பிரதமர்.
சுமார் 70% பிரதிநிதிகள் அறையில் இல்லை எனக் கூறப்படுகிறது. எந்தெந்த நாடுகளின் பிரதிநிதிகள் வெளியேறினர் என்பது குறித்த துல்லியமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த சில வாரங்களில் பாலஸ்தீன அரசை இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகள் அங்கீகரித்த நிலையில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான சர்வதேச அழுத்தம் இன்று உச்சகட்டத்தை எட்டியது.
நெதன்யாகு பேசியதென்ன?
இஸ்ரேல் பிரதமர் மத்திய கிழக்கு முழுவதும் ஈரானின் ஆதரவு பெற்ற இயக்கங்கள் இருக்கும் வரைபடம் ஒன்றைக் காட்டி அதனை 'சாபம்' என அழைத்தார். அவர் கடந்த ஆண்டு முழுவதும் லெபனானில் ஹெஸ்பொல்லா, ஏமனில் ஹவுத்திகள், காசாவில் ஹமாஸ் மற்றும் ஈரானுக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி கூறிய அவர், இரு நாடுகளும் ஒரே எதிரியை எதிர்த்துப் போரிடுவதாகத் தெரிவித்தார்.
பாலஸ்தீனம் என்ற நாடு இருக்காது என உறுதியாகக் கூறிய நெதன்யாகு, இந்த முடிவை பெரும்பான்மை இஸ்ரேல் மக்கள் ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐ.நா. விசாரணைக் குழுவின் முடிவை அவர் மறுத்த அவர், அது ஆதாரமற்றது என்றார்.
காசாவுக்குள் பெரும்பான்மை உதவிகள் செல்வதை இஸ்ரேல் தடுப்பதாக ஐநாவின் பல முகமைகள் முன்வைத்த கருத்தையும் மறுத்தார். காசா நகரில் இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட பஞ்சம் நிலவுவதை ஐ.நா. ஆதரவு பெற்ற அமைப்பு உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
காசாவில் உள்ள பணயக்கைதிகளை தாங்கள் மறக்கவில்லை எனத் தெரிவித்தார் நெதன்யாகு. இன்னும் 48 பணயக் கைதிகள் ஹமாஸ் பிடியில் உள்ளனர். அவர்களில் 20 பேர் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.