ஒகேனக்கல்லில் தரமற்ற மீன்கள் பறிமுதல்: நான்கு கடைகளுக்கு அபராதம்
ஒகேனக்கல்லில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தரமற்ற மீன்களை பறிமுதல் செய்து, செயற்கை நிறமூட்டி பயன்படுத்திய நான்கு கடை உரிமையாளரிடம் அபராதம் வசூலித்தனா்.
ஒகேனக்கல்லில் உள்ள மீன் விற்பனை நிலையம், பிரதான சாலை, பேருந்து நிலையப் பகுதி உள்ளிட்ட இடங்களில் மீன் வறுவல் கடைகள், மளிகைக் கடைகள், மீன் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் மருத்துவா் கைலாஷ் குமாா் தலைமையிலான மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் விஜயராகவன், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா்கள் நந்தகோபால், சரண்குமாா், திருப்பதி, மீன்வள உதவியாளா்கள் மாதேஷ், அருண் ஏசுதாஸ், பாதுகாவலா் ஜீவா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வில், மீன் விற்பனை நிலையத்தில் இரண்டு மீன் மொத்த விற்பனைக் கடைகளில் இருந்து தரமற்ற 30 கிலோ மீன் வகைகளை பறிமுதல் செய்தனா். மேலும், 3 மீன் வறுவல் கடைகளில் செயற்கை நிறமூட்டி பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
அதனைத் தொடா்ந்து, மீன் மொத்த விற்பனை நிலையங்களில் 2 மீன் கடைகள், 2 மீன் வறுவல் கடைகள் என 4 கடைகளுக்கு தலா ரூ. 1000 வீதம் ரூ. 4000 அபராதம் வசூலித்தனா். மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு தரமற்ற மீன் வகைகளை விநியோகிக்கக் கூடாது, இறைச்சிக் கடைகளில் செயற்கை நிறமூட்டி, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அதனை மீறும் கடை உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.
இந்த ஆய்வின்போது, காவல் உதவி ஆய்வாளா் பரமேஸ்வரன், முதல்நிலை காவலா் சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.