Sarfaraz: வாய்ப்பின் வாசற்படியோடு அனுப்பப்பட்ட சர்ஃபராஸ்; அகர்காரின் சப்பைக்கட்ட...
தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!
தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss World), மே 10 ஆம் தேதியில் தொடங்கியது. மே 31 ஆம் தேதிவரையில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டு சார்பாக பங்கேற்ற அந்நாட்டு அழகி மில்லா மேகி, போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாகக் கூறி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
தெலங்கானாவுக்கு மே 7 ஆம் தேதியில் வந்தடைந்த மில்லா, மீண்டும் மே 16 ஆம் தேதியிலேயே இங்கிலாந்துக்கு திரும்பிவிட்டார். குடும்ப சூழ்நிலையின் காரணமாக, நாடுதிரும்புவதாகக் கூறிச் சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டில் நேர்காணலில் அவர் பேசியதாவது, போட்டியில் போட்டியாளர்கள் 24 மணிநேரமும் ஒப்பனையுடனும், கண்கவர் ஆடைகளுடனும்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். தொடர்ந்து, போட்டியில் 6 விருந்தினர்கள் கொண்ட ஒவ்வொரும் மேசையிலும் 2 பெண்கள் ஒதுக்கப்பட்டனர். இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே, நாங்கள் அமர்த்தப்பட்டோம்.

என்னால் இதை நம்ப முடியவில்லை; இது மிகவும் தவறானது. வித்தைக் காட்டும் குரங்குகளைப்போல அங்கு அமர்ந்திருந்தோம். அவர்களின் பொழுதுபோக்குக்காக நாங்கள் சுரண்டப்படுவது ஏற்றுக்கொள்வதாய் இல்லை. சுரண்டப்படுவதற்காக யாரும் இங்கு வரவில்லை.
உலக அழகிப் பட்டத்துக்கென ஒரு தனிமதிப்பு இருக்க வேண்டும். ஆனால், அங்கு நான் ஒரு விலைமாதுவாக உணர்ந்தேன். ஆகையால்தான், ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்வகையிலும், இளைஞர்களை ஊக்குவிக்கவும் போட்டியில் இருந்து விலகினேன். இதுபோன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.
இருப்பினும், மில்லாவின் குற்றச்சாட்டை மறுத்த போட்டி அமைப்பான மிஸ் வேர்ல்டு, ஆதாரமற்ற, பொய்க் குற்றச்சாட்டுகளை மில்லா பரப்பி வருகிறார். போட்டியின்போது, அவரின் மகிழ்ச்சி, நன்றி, பாராட்டை வெளிப்படுத்தியது தொடர்பான எடிட்டிங் செய்யப்படாத விடியோவும் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.
போட்டியில் இருந்து வெளியே செல்வதாக மில்லா கூறியதையடுத்து, அவருக்கு பதிலாக இங்கிலாந்து நாட்டின் இரண்டாவது அழகியான சார்லோட் கிராண்ட் மாற்றப்பட்டார்.