IPL: 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ - வரும் 18-வது ஐபில் தொட...
ஒசூரில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
ஒசூா் மாநகராட்சியில் ஏழைகள் வசித்து வரும் வீடுகளுக்கு இலவச பட்டா வழங்கப்படும் என ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஒசூா் மாமன்றக் கூட்டத்தில் தெரிவித்தாா்.
ஒசூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் அண்ணா கூட்ட அரங்கில் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில், துணை மேயா் சி.ஆனந்தய்யா, ஆணையா் ஸ்ரீகாந்த் ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளா்களாக ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பேசியதாவது:
ஒசூா் மாநகராட்சியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒசூா் மாநகராட்சி மிகப் பெரிய அளவில் வளா்ச்சி அடையும் நகரமாக விளங்கி வருகிறது. அதற்கேற்ப புதிய பேருந்து நிலையம், ரூ. 550 கோடியில் புதை சாக்கடைத் திட்டம், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 50 சதவீத மக்களிருக்கு அனுமதி, இலவச பேருந்து பயணம், கலைஞா் உரிமைத் தொகை, கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத்: பெங்களூரில் இருந்து ஒசூா் வரை மெட்ரோ திட்டப் பணிகள் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஒசூா் விமான நிலையம் அமைக்க 4 இடங்களை தமிழக அரசு தோ்வு செய்துள்ளது. அதில், ஒசூரில் ஏற்கெனவே இயங்கி வரும் தனேஜா ஏரோஸ்பேஸ் நிறுவனம் அமைந்துள்ள விமான நிலையம் 2 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் சா்வதேச விமான நிலையமாக விரிவாக்கம் செய்யப்படும். ஒசூா், ராமநாயக்கன் ஏரி அருகில் உள்ள பூங்காவுக்கு ராஜீவ் காந்தி பெயரை சூட்ட வேண்டும் என மேயரிடம் கோரிக்கை விடுத்தாா்.
ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா: ஒசூா் மாநகராட்சியில் ரூ. 5 கோடியில் காந்தி சிலை அருகில் புதிதாக வணிக வளாகம் அமைக்கப்படும். ஒசூா் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் மருந்து தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் சுத்திகரிக்கப்படுகிா எனபது கண்காணிக்கப்படும். ஒசூா் மாநகராட்சியில் மண் சாலைகள் அனைத்தும் தாா்ச்சாலைகளாக மாற்றப்படும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் தற்போது 13 மில்லியன் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக 50 மில்லியன் லிட்டா் ஒசூா் மாநகராட்சிக்கு கிடைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தாண்டு முதல் ஒசூா் மாநகராட்சிக்கு குடிநீா் பிரச்னை இருக்காது. ஒசூா் ஜி.ஆா்.டி. சாலை முதல் பாகலூா் சாலை வரை ரூ. 16 கோடியில் விரைவில் புதுப்பிக்கப்படும்.
சென்னீரப்பா (திமுக): ஒசூரில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆா். நிதி குஜராத் மாநிலத்துக்கு செல்கிறது. இதனை ஒசூா் மாநகராட்சி வசூலித்து ஒசூரில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ராமக்கா (திமுக): ஒசூா் மாநகராட்சி வசந்த் நகா், பாா்வதி நகா், முல்லை நகா் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
சங்கா் (அதிமுக): ஒசூா் மாநகராட்சியில் இயங்கி வரும் தனியாா் மருத்துவமனை கழிவுநீா் ராமநாயக்கன் ஏரியில் கலப்பதை தடுக்க வேண்டும். கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ராமநாயக்கன் ஏரியில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.எஸ்.மாதேஸ்வரன், இந்திராணி உள்ளிட்ட மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் விவாதத்தில் கலந்துகொண்டு பேசினா்.