நைஜீரியா, பிரேசில் பயணம்! தலைவர்களுக்கு பரிசுப் பொருள் வழங்கிய பிரதமர் மோடி!
``OTT வந்தும் சுதந்திர சினிமாவுக்கு கடினமான நேரம் இது.." - IFFI 2024 விழாவில் நடிகர் மனோஜ் பாஜ்பாய்
2024-ம் ஆண்டுக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of India 2024) கோவாவில் நடந்து வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு கலா அகாடமியில் நடைபெற்ற 'Mastering the Unseen' என்ற தலைப்பில் ஒர் உரையாடல் நடத்தப்பட்டது.
இந்த அமர்வில் பத்மஶ்ரீ விருது வாங்கிய நடிகர் மனோஜ் பாஜ்பாய் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``உலகில் தீவிரமான மோதல்கள் நடந்துவரும் காலத்தில் வாழ்கிறோம். அதன் தாக்கம் திரைப்படத் துறையையும் தொடாமல் விடாது. நான் முக்கிய திரைப்படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறேன். அதேப் போல, ஒரு நடிகராக ஒரே மாதிரியானப் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவிலும் தெளிவாக இருக்கிறேன்.
அதனால்தான் சினிமாத் துறையில் பெயர் சொல்லும் நடிகர்களில் ஒருவனாக கருதப்படுகிறேன். அதற்கு முக்கியக் காரணம் நான் என் திறமையை ஆராய முற்பட்டதுதான். அதற்கான சவாலாகவே தேவாஷிஷ் மகிஜா, போன்ஸ்லே, ஜோரம், டெஸ்பாட்ச் போன்ற படங்களைத் தேர்வு செய்தேன். ஏனெனில், கலை என்ற வரையறைக்கு முழுமையாக உண்மையாக இருப்பது சினிமா மட்டுமே. பொழுதுபோக்கிற்கான சினிமா பொதுவாகவே மிகவும் பிரபலமாகிவிடும். சினிமாவை வணிகமாகக் கருதுபவர்கள் எப்போதும் சிறப்பாகச் செயல்பட்டு அதில் வெற்றிக் கண்டு வருகின்றனர். அவர்களின் படங்களுக்காக பார்வையாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.
இந்த இக்கட்டான காலக்கட்டத்தில், சுதந்திர சினிமாவுக்கு வழிகாட்டுவதுதான் இப்போதைய நமது தேவை. அந்த சுதந்திர சினிமாதான் இந்திய சினிமாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சியைத் தீர்மானிக்கும். இல்லையென்றால் சினிமா ஒரு வியாபாரமாக மட்டுமே சுருங்கிவிடும். OTT தளங்கள் வந்தபோது சுதந்திரமான சினிமாவுக்காக ஒரு வலுவான தளம் என நினைத்தோம். ஆனால் இன்று அந்தத் தளம், ஒரு குறிப்பிட்ட வகைத் திரைப்படங்களை வரவேற்பதை நிறுத்திவிட்டது. அதனால், இது சுதந்திர சினிமாவுக்கு கடினமான நேரம். அதற்காக நம்பிக்கையை இழந்துவிடாமல், தைரியமாக இருக்க வேண்டும்.
சினிமா என்பது தெளிவாக இயக்குநரின் ஊடகம். ஏனென்றால் அதில் நடிக்கும் நடிகர் ஒரு காட்சியில் சிறப்பாக நடிக்கலாம், சிறப்பாக ஆடலாம். ஆனால் இறுதியில் அந்தக் காட்சி வரவேண்டுமா, வேண்டாமா என்பதை இயக்குநர்தான் தீர்மானிக்கிறார். அதேப் போல திரையரங்கம் ஒரு நடிகரின் ஊடகம். அங்கு இருப்பவர்களின் மொத்தக் கட்டுப்பாடும் நடிகரின் பக்கம் சென்றுவிடும். அதனால், கதைகளைத் தேர்வு செய்யும்போது கவனமாக செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...