ஒசூா் பேரவைத் தொகுதியில் 110 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் எம்எல்ஏ வலியுறுத்தல்
ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 110 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என தொகுதி உறுப்பினா் ஒய்.பிரகாஷ் வலியுறுத்தினாா்.
ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சேவகானப்பள்ளி ஊராட்சி ராஜீவ் நகா், தும்மனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட முனீஸ்வா் நகா் ஆகிய பகுதியில் 110 குடியிருப்புகள் உள்ளன. இங்கு பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் கடந்த 20 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனா். இங்குள்ள 110 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.
ஒசூா் தொகுதியில் சீரான மின் விநியோகம் செய்ய கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்றாா்.
இதற்கு மின்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தது:
ஒசூா் தொகுதியில் சீரான மின்விநியோகம் செய்வதற்கு 793 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிதாக 13 மின்மாற்றிகள் அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒசூா் ஒன்றியம் தும்மனப்பள்ளி, நந்திமங்கலம், பலவனப்பள்ளி, கொளதாசபுரம் பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் நிலவுவதை சரிசெய்ய இரண்டு புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளாா். அதற்கான பணி விரைந்து முடிக்கப்படும். 110 வீடுகளுக்கு துறை அதிகாரிகளை அனுப்பி மின் இணைப்பு வழங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.