ஒடிசா தொழிற்சாலை துணைத் தலைவரைக் கடத்திய 7 பேர் ஜார்க்கண்டில் கைது!
ஒடிசா மாநிலத்தில் சுரங்கத் தொழிற்சாலையின் துணைத் தலைவரைக் கடத்திய 7 பேர் ஜார்க்கண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசாவின் கியோஞார் மாவட்டத்தைச் சேர்ந்த சுரங்கத் தொழிற்சாலையின் துணைத் தலைவரான நிமாநந்தா ப்ரதான். இவர், கடந்த பிப்.13 அன்று வேலைக்கு சென்ற பின் வீட்டிற்கு திரும்பவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதில், அவர் சென்ற காரை அன்று தான் புதியாதாக பணியில் சேர்ந்த ஓட்டுநர் ஓட்டி சென்றதாகவும், இருவரது செல்போன் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் ப்ரதானை கண்டுபிடிக்க 12 தனிப்படைகள் அமைத்து ஒடிசா, ஜார்க்கண்டு, பிகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேடி வந்தனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அவர் ராஞ்சி பகுதியில் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிக்க: தில்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்
இருப்பினும், ப்ரதானை கடத்திய கடத்தல்காரர்கள் அவரது குடும்பத்தினரிடம் ரூ.2 கோடி பணம் கேட்டுள்ளனர். காவல் துறையினரின் விசாரணை துவங்கப்பட்ட பின்னரும் அவரது குடும்பத்தினரால் ரூ.60 லட்சம் கடத்தல்காரர்களுக்கு கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடத்தல் காரர்கள் 7 பேரும் ஜார்க்கண்டு மாநிலத்தவர்கள் என்று கண்டுபிடித்த போலீஸார் கடந்த 10 நாள்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையினால், நேற்று (பிப்.22) அவர்களை ராஞ்சிக்கும் அருகில் சுற்றிவளைத்து கைது செய்து, ப்ரதானை மீட்டுள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்து ரூ.50.90 லட்சம் பணம், பொம்மை துப்பாக்கி, 8 செல்போன்கள், ப்ரதானின் கார், இருசக்கர வாகனம் ஒன்று, இந்த குற்றத்திற்கான முழு வரைபடம் மற்றும் அவர்களது அடையாள அட்டைகள் ஆகியவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த முழு குற்றத்திற்கும் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஜார்க்கண்டை சேர்ந்த தாதா ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைப் பிடிக்க காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.