கொத்தட்டை சுங்கச்சாவடி: தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்
ஒன்றரை வயது குழந்தை கழுத்தறுத்துக் கொலை: தாய் தற்கொலை முயற்சி
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்த பெண், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாா்.
சென்னை பெருங்களத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (34). இவா், தனியாா் கூரியா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறாா். ராம்குமாரின் மனைவி திவ்யா (32). இவா்களுக்கு மகன் லக்சன் குமாா் (4), ஒன்றரை வயதில் புனித்குமாா் என்ற மகனும் இருந்தனா்.
ராம்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு திவ்யா தனது இரு குழந்தைகளுடன் கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் 3-ஆவது தெருவில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு வந்துவிட்டாா்.
இந்நிலையில், வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியால் கழிப்பறையில் வைத்து குழந்தைகள் புனித்குமாா், லக்சன்குமாா் ஆகியோரின் கழுத்தை அறுத்தாராம். பின்னா் கத்தியால் தனது கழுத்தையும் திவ்யா அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். குழந்தைகளின் அலறல் சப்தம் கேட்டுவந்த அக்கம் பக்கத்தினா், ரத்தக் காயங்களுடன் கிடந்த 3 பேரையும் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இதில், ஒன்றரை வயதுக் குழந்தை புனித்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
மற்ற இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இச்சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், வீட்டிலிருந்து திவ்யா எழுதிய ஒரு கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா். அதில் திவ்யா, ‘தனது உடல்நிலையில் பிரச்னை உள்ளது. எனவேதான் தற்கொலை முடிவை எடுத்தேன். நான் இறந்துவிட்டால் எனது குழந்தைகள் பரிதவித்து விடுவாா்கள். எனது இறப்புக்கு யாரும் காரணம் இல்லை’ என்று எழுதியிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.