மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு!
ஒன் பை டூ
இனியன் ராபர்ட், மாநிலச் செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்
“அழைப்பு விடுத்ததில் என்ன தவறு இருக்கிறது... புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய், `பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் வழியில் பயணிப்போம்’ என்று சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தொடங்கி தி.மு.க., வி.சி.க., இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் கொள்கைத் தலைவர்களும் அவர்கள்தான். அதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்தத் தலைவர்களைக்கொண்ட தமிழக வெற்றிக் கழகம், `இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிப்பதில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் கிடையாது. இது ஒரு பொது அழைப்புதான். நடிகர் கமல் புதிதாக ஒரு கட்சி தொடங்கிய நேரத்தில், அவரை முதலில் ‘கூட்டணிக்கு வாருங்கள்...’ என்று அழைத்தது தமிழக காங்கிரஸ் கட்சிதான். அப்போதும் நாங்கள் தி.மு.க கூட்டணியில்தான் இருந்தோம். அந்தச் சமயத்தில் கமல் தி.மு.க-வை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருந்தார். அதே கமல் 2024 தேர்தலில், `இந்தியா’ கூட்டணியில் தி.மு.க-வுடன் சேர்ந்து பயணித்து வருகிறார். தி.மு.க-வுடன் எங்களுக்கு எந்த உரசலும் இல்லை. ஒத்த கருத்துள்ள கட்சிகள் `இந்தியா’ கூட்டணிக்குள் வர வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே அழைப்பு விடப்பட்டிருக்கிறது. அரசியலில் எப்போது வேண்டுமானாலும், எந்த மாற்றமும் நிகழலாம். தான் முன்வைத்திருக்கும் தலைவர்களின் கொள்கைகளை அவர் பின்பற்றப்போகிறார் என்றால், விஜய் எங்களுடன் பயணிப்பதே சரியாக இருக்கும். அவர் யார் என்பதை விஜய்தான் முடிவுசெய்ய வேண்டும்!”
ஆ.சம்பத்குமார், கொள்கை பரப்பு அணி, த.வெ.க
“வரவேற்கத்தக்க அழைப்புதான். ஆனால், அதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. நாங்கள் அரசியலுக்கு வரும்போதே எங்கள் கொள்கை எதிரி பா.ஜ.க., அரசியல் எதிரி தி.மு.க என்பதை மிக வெளிப்படையாக அறிவித்திருக்கிறோம். `இந்தியா’ கூட்டணியில் தி.மு.க அங்கம் வகிக்கிறது. அதேநேரம், தமிழகத்தில் `இந்தியா’ கூட்டணிக்கு தி.மு.க தலைமை தாங்குகிறது. மக்கள் விரோதக் கட்சியான, மன்னராட்சி நடத்தும், ஜனநாயகத்துக்கு விரோதமான தி.மு.க அங்கம் வகிக்கும் கூட்டணியோடு... தமிழக வெற்றிக் கழகம் எந்தக் காலத்திலும் ஒன்றாகப் பயணிக்காது. அதேசமயம், `இந்தியா’ கூட்டணியிலிருந்து தி.மு.க விலகினால், அந்த இடத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைமை தாங்கும் நிலை ஏற்பட்டால்... கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளுடன் கூட்டணிவைப்பது குறித்து எங்கள் தலைவர் விஜய் கண்டிப்பாகப் பரிசீலனை செய்வார். நாங்கள் முன்பே சொன்னதுபோல, ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தால், எங்கள் கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும். ‘மக்கள் நீதி மய்யம்’ ஆழமான கொள்கைப் பிடிப்புள்ள கட்சி அல்ல. ஆனால், நாங்கள் கொண்டிருக்கும் கொள்கைகள் அனைத்துமே மக்களுக்கானவை. அரசியலில் மக்கள் நீதி மய்யத்தோடு, எங்கள் கட்சியை ஒப்பிடுவதே தவறு. மத்தியில் பா.ஜ.க ஆட்சி எப்படி அகற்றப்பட வேண்டுமோ, அதேபோல தமிழகத்தில் தி.மு.க ஆட்சி முற்றிலுமாக அகற்றப்படவேண்டிய ஒரு கட்சி. அதற்காக, தமிழக வெற்றிக் கழகமும் எங்கள் தலைவரும் அயராது பாடுபடுவோம்!”