பும்ரா அசத்தல்: முதல்முறையாக கோல்டன் டக் அவுட்டான ஸ்டீவ் ஸ்மித்!
ஒப்பந்தங்களுக்கு ரூ.2,239 கோடி லஞ்சம்: அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடா்பாக அமெரிக்காவில் உள்ள நியூயாா்க் நீதிமன்றத்தில் அந்நாட்டு நீதித் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய சூரிய எரிசக்தி கழக நிறுவனத்துக்கு (எஸ்இசிஐ) 8,000 மெகாவாட் சூரிய மின்சக்தியை விநியோகிக்கும் ஒப்பந்தப்புள்ளி, தொழிலதிபா் கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இதேபோல எஸ்இசிஐ-க்கு 4,000 மெகாவாட் சூரிய மின்சக்தியை விநியோகிக்கும் ஒப்பந்தப்புள்ளி, தில்லியை தலைமையிடமாக கொண்ட அஸ்யூா் பவா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, இரு நிறுவனங்களும் விநியோகிக்கும் 12,000 மொகாவாட் சூரிய மின்சக்தியை வாங்கும் மாநில மின் விநியோக நிறுவனங்களைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு எஸ்இசிஐ-க்கு ஏற்பட்டது.
ஆனால், அதிக விலை காரணமாக அந்த மின்சக்தியை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை மாநில மின் விநியோக நிறுவனங்களுடன் எஸ்இசிஐயால் மேற்கொள்ள முடியவில்லை.
இதைத் தொடா்ந்து, மாநில மின் விநியோக நிறுவனங்களுடன் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு அரசு அதிகாரிகளை வலியுறுத்த கெளதம் அதானி, அவரின் உறவினா் சாகா் அதானி மற்றும் 6 போ் குறுக்கு வழியில் விரிவான முயற்சிகளை மேற்கொண்டனா்.
ஆந்திர அதிகாரிகளுக்கு ரூ.1,750 கோடி: இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு அப்போதைய ஆந்திர முதல்வரை தொழிலதிபா் கெளதம் அதானி சந்தித்தாா். இதைத் தொடா்ந்து, அதானி குழுமத்திடம் இருந்து 7,000 மெகாவாட் சூரிய மின்சக்தியை வாங்க ஆந்திர அரசு ஒப்புக்கொண்டது. இதில் ஆந்திர அதிகாரிகளுக்கு மட்டும் சுமாா் ரூ.1,750 கோடி வழங்கப்பட்டது.
இதுபோல ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வெவ்வேறு மாநில அரசு அதிகாரிகளுக்கு கெளதம் அதானி மற்றும் அவரின் உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோா் மூலம், மொத்தம் 265 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சமாக அளிக்கப்பட்டது.
2 பில்லியன் டாலா்கள் லாபம் ஈட்ட...: இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு 2 பில்லியன் டாலா்களுக்கும் (சுமாா் ரூ.16,893 கோடி) அதிகமாக அதானி க்ரீன் நிறுவனம் லாபம் ஈட்ட திட்டமிட்டது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஒப்பந்தம்: அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியைத் தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலத்தில், உற்பத்தி சாா்ந்த திட்டத்தின் கீழ் எஸ்இசிஐயுடன் தமிழ்நாடு, சத்தீஸ்கா், ஆந்திரம், ஒடிஸா மற்றும் ஜம்மு-காஷ்மீா் மின் விநியோக நிறுவனங்கள் மின் விநியோக ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இதற்காக அரசு அதிகாரிகளை பலமுறை அதானியே தனிப்பட்ட முறையில் நேரடியாக சந்தித்தாா்.
12,000 மொகாவாட் சூரிய மின்சக்தியை விநியோகிப்பதற்கான திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமம் திரட்டியது. இந்நிலையில், அந்த வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களை மோசடிக்குள்ளாக்கி அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது மறைக்கப்பட்டது.
சாகா் அதானியை அணுகிய எஃப்பிஐ: இந்த விவகாரம் தொடா்பாக கடந்த 2023-ஆம் ஆண்டு அமெரிக்காவில் சாகா் அதானியை எஃபிஐ சிறப்பு அதிகாரிகள் அணுகி சோதனை மேற்கொண்டனா். அப்போது அவரிடம் இருந்த மின்னணு கருவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேபோல பங்குகள் மோசடி, தகவல் தொடா்பு மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதாக கெளதம் அதானி, சாகா் அதானி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க பங்கு முதலீட்டாளா்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை மீறியதாக அந்நாட்டு பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமும் அவா்கள் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.