அதானியின் Clean Chit முதல் நீட்டிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கல் வரை; செப்...
ஒரு மரம் - ஒரு லிட்டர் தண்ணீர்; 60,000 மரங்கள் வளர்த்து வறண்ட நிலத்தை பசுமையாக்கிய 75 வயது முதியவர்!
ராஜஸ்தான் மாநிலம் இயற்கையிலேயே வறட்சியானது. மிகவும் சொற்ப அளவில் மட்டுமே மழை பெய்யும்.
அப்படிப்பட்ட மாநிலத்தில் 75 வயது முதியவர் ஒருவர் 60 ஆயிரம் மரங்களை வளர்த்து சாதித்து இருக்கிறார்.
ராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தில் தாந்தா என்ற கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் வர்மா என்ற விவசாயி தனது வயதான காலத்திலும் தன் தோட்டத்திற்கு வருபவர்களுக்கு பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
இந்தியா முழுவதிலுமிருந்து விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வருகிறார்கள்.
சிறு வயதிலிருந்தே விவசாய வேலைகளில் அதிக ஆர்வம் கொண்ட சுந்தரம் இப்போது 60 ஆயிரம் மரங்களை வளர்த்து ஒரு காட்டையே உருவாக்கியிருக்கிறார்.

இது குறித்து பேசிய சுந்தரம், ''சிறுவயதில் நான் பள்ளியிலிருந்து நேராக தோட்டத்திற்குத்தான் செல்வேன். எனது பெற்றோர், சித்தப்பா, தாத்தா ஆகியோர் தோட்டத்தில் கடினமாக உழைப்பாளர்கள்.
எனது சித்தப்பா படித்து ஆசிரியர் வேலைக்கு சென்ற பிறகு அனைத்தும் மாறியது.
கல்வியால் வாழ்க்கையையே மாற்ற முடியும் என்று உணர்ந்தேன். எனவே, நானும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.
1985-ல் மழைக் காலத்தில் உழவடிப்பதன் மூலம் கூடுதல் தண்ணீர் இல்லாமல் தாவரங்களால் வளர முடியும் என்பதைத் தெரிந்து கொண்டேன். அந்த முறையை பயன்படுத்தி மரங்களை நட ஆரம்பித்தேன்.
மழைக் காலம் தொடங்கியவுடன் 20 சென்டிமீட்டர் ஆழத்திற்கு உழவு செய்வோம். இதன் மூலம் மழைநீரை அதிக அளவு உறிஞ்சிகொள்ள முடிகிறது.
கன்றுகளை நடும்போது 25 சென்டிமீட்டர் ஆழத்தில் நடுகிறோம். இதனால் பூமிக்குள் இருக்கும் ஈரப்பதத்தை அவை எடுத்துக்கொண்டு கூடுதல் தண்ணீர் தேவை இன்றி வளர்ச்சியடைகிறது.
இந்த முறையைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் மரக்கன்றுகளை நடவு செய்தோம்.
ஒரு மரக்கன்றுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் மட்டுமே கொடுப்போம். அந்த தண்ணீரில் மரக்கன்று வளரும்.
இப்போது நான் சிறுதானியங்கள், கடுகு, பருத்தி ஆகியவற்றை மிகவும் குறைவான தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறேன்.
எதிர்காலத்திற்கு தண்ணீர் சேமிப்பது மிகவும் அவசியமானது'' என்று தெரிவித்தார்.

2020-ல் மகாத்மா ஜோதிராவ் புலே பல்கலைக்கழகம் சுந்தரத்தின் விவசாயப் புதுமைகளை கெளரவிக்கும் விதமாக அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்தது.
சுந்தரம் தனது வாழ்நாளில், ராஜஸ்தானில் விளையக்கூடிய 15 தானியங்களின் 700 வகையான விதைகளை சேகரித்து இருக்கிறார்.
அதோடு பல்லுயிர்களை பாதுகாப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இப்போது சுந்தரத்தின் இரண்டு மகன்களும் தங்களின் மனைவிகளோடு முழுநேர விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுந்தரத்தின் மனைவி பகவதியும் தனது கணவருக்கு துணையாக இருந்ததோடு, சொந்தமாக கரையானை கட்டுப்படுத்த இரண்டு வழிகளை கண்டுபிடித்திருக்கிறார். அவரது இந்த கண்டுபிடிப்புகளுக்கு தேசிய விருதும் கிடைத்து இருக்கிறது.
சுந்தரத்திடம் விவசாய பயிற்சி எடுத்துக்கொண்ட ஜுன்ஜுன்வாலா பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற விவசாயி அவருடனான தனது அனுபவத்தை கூறுகையில், ''சுந்தரம்ஜியைச் சந்திப்பதற்கு முன்பு, வறண்ட பகுதியில் விவசாயம் செய்வது தோல்வியை ஏற்படுத்தும் என்று நினைத்தேன்.
ஆனால், அவரிடம் பயிற்சி பெற்ற பிறகு, அவரது `ஒரு மரம் - ஒரு லிட்டர் தண்ணீர்' முறையைப் பயன்படுத்தி 200-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டேன். அவை இப்போது செழித்து வளர்கின்றன" என்று தெரிவித்தார்.

சுந்தரத்தின் மூத்த மருமகள் சுமன் வர்மா பேசுகையில், "அவர் மரங்களை நடுவது மட்டுமல்லாமல் நம் அனைவருக்கும் கருத்துக்கள், மதிப்புகள் மற்றும் நோக்கத்தை கற்றுக்கொடுக்கிறார்.
அவர் இவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்படுவதைப் பார்ப்பது எங்கள் முழு குடும்பத்திற்கும் உத்வேகம் அளிக்கிறது'' என்றார்.
வறட்சி பகுதியை பசுமையாக மாற்றுவதே அவரது பிரதான நோக்கம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
உள்ளூர் விதைகளை விவசாயத்திற்கு அதிக அளவில் பயன்படுத்த வேண்டுமென்று விவசாயிகளை ஊக்கப்படுத்தும் சுந்தரம், சொந்தமாக அதிக மகசூல் கொடுக்கும் விதைகளை உற்பத்தி செய்து அதனை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார்.
அவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கெளரவித்திருக்கிறது.