சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஜனநாயக சக்திகள் எதிர்க்க வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்
நமது சிறப்பு நிருபர்
"ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலரும் அக்கட்சியின் திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: அரசமைப்புச் சட்டம் (129-ஆம் திருத்தம்) மசோதா - 2024 என அதிகாரபூர்வமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள "ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மதிமுக கடுமையாக எதிர்க்கிறது.
கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சட்டப்பிரிவு 327-இன்கீழ் தேர்தல்களை நடத்தியோ அல்லது சட்டங்களைக் கொண்டுவந்தோ கூட்டாட்சி போன்ற அடிப்படை அரசமைப்புச் சட்டங்களை மீற நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் இல்லை.
இந்த அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடு நாடாளுமன்றத்தைவிட அரசமைப்புச் சட்டத்திற்கே மேலாதிக்கத்தை வழங்குகிறது.
இதைச் சிதைக்கவே, பாஜக ஒரே நாடு, ஒரே தேர்தல்முறையை சட்டமாக்க முயல்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது கூட்டாட்சி முறையின் மீதான நேரடித் தாக்குதலாகும், இது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பைத் தகர்ப்பதற்கும், இந்திய அரசை சர்வாதிகார, ஒற்றையாட்சி அரசாக மாற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கே அடித்தளமிடும்.
இந்தியா சர்வாதிகார நாடாக மாற்றப்படுவதைத் தடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று துரை வைகோ கூறியுள்ளார்.