ஒரே நாளில் தாயகம் திரும்பிய 5,000 ஆப்கன் குடும்பங்கள்!
ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஒரே நாளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் குடும்பங்கள் தங்களது தாயகத்துக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுகள், தங்களது நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வரும் ஆப்கன் அகதிகள் உடனடியாக வெளியேற உத்தரவிட்டு, கடந்த சில மாதங்களாக அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஈரானில் இருந்து நேற்று (ஜூலை 10) ஒரு நாளில் மட்டும் சுமார் 4,852 ஆப்கன் குடும்பங்களும், பாகிஸ்தானில் இருந்து 153 குடும்பங்களும், தங்களது தாயகமான ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வந்துள்ளதாக, இடைக்கால தலிபான் அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில காலமாக ஆப்கன் அகதிகள் தங்களது தாயகம் திரும்புவது அதிகரித்து வரும் சூழலில், ஈரானிலிருந்து அகதிகளை வெளியேற்றுவதில் நிதானமாகவும், பொறுமையுடனும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆப்கானிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கன் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஈரான் அரசுக்கு, தலிபான் அரசின் பிரதமர் முஹமது ஹசன் அக்ஹுந்த் காகர் தனது நன்றிகளைத் தெரிவித்ததுடன், அகதிகளின் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இத்துடன், நாடு திரும்பும் ஆப்கன் மக்களுக்குத் தேவையான உடனடி மருத்துவம், உணவு ஆகியவற்றை தலிபான் அரசு வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஈரானில் இருந்து சுமார் 5 லட்சம் ஆப்கன் அகதிகள் தங்களது நாட்டிற்குத் திரும்பி வந்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
மேலும், 2025-ல் மட்டும் ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வசித்த சுமார் 15 லட்சம் ஆப்கன் மக்கள் தங்களது தாயகம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
It is reported that more than 5,000 Afghan families have returned to their homeland from Iran and Pakistan in a single day.
இதையும் படிக்க: திருமணம் மீறிய உறவை வெளிப்படுத்தி விடுவேன்! பயனரை மிரட்டிய ஏஐ!