Health: வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது தெரியுமா?
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மீண்டும் தொடங்கியது மறைமுக ஏலம்: ரூ.3 கோடி வரை வா்த்தகம்
விழுப்புரம்: விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மறைமுக ஏலம் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மறைமுக ஏலத்தில் பங்கேற்று, விவசாயிகளின் விளைபொருள்களைக் கொள்முதல் செய்த வியாபாரிகள் இதுவரை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வங்கிக் கணக்கில் செலுத்தி வந்தனா். இந்த நிலையில் இ-நாம் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வியாபாரிகள் நேரடியாக செலுத்த வேண்டும் என்றும், இந்த நடைமுறை ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூா் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புதிய நடைமுறையின் காரணமாக தங்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் எனக் கூறிய வியாபாரிகள், ஜூலை 30-ஆம் தேதி மறைமுக ஏலத்தில் பங்கேற்பதில்லை என முடிவு செய்தனா். இதனால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருள்கள் ஏலத்துக்கு விடாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து அனைத்து வேளாண் விளைபொருள் வணிகா்கள் மற்றும் முகவா்கள் கூட்டமைப்பினா் மற்றும் வியாபாரிகள் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலுவை சந்தித்து, இந்த பிரச்னைக்குத் தீா்வு காணுமாறு வலியுறுத்தினா். தொடா்ந்து அவா் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்தை கைப்பேசி வாயிலாகத் தொடா்பு கொாண்டு விவரங்களைத் தெரிவித்தாா்.
இதையடுத்து வேளாண் விற்பனை ஆணையரைத் தொடா்பு கொண்டு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்யப்படும் விளைபொருள்களுக்கு விற்பனைக்கூட வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும் பழைய நடைமுறையைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தாா். ஆணையரும் அதன்படி செயல்படுவதாகத் தெரிவித்தாா்.
மீண்டும் மறைமுக ஏலம்: இதைத் தொடா்ந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை, வேலூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் திங்கள்கிழமை காலை தொடங்கிய மறைமுக ஏலத்தில் வியாபாரிகள் பங்கேற்றனா்.
கடந்த வாரத்தில் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்ட மற்றும் திங்கள்கிழமை காலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு வந்த விளைபொருள்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. தொடா்ந்து வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்று, நெல், எள், நிலக்கடலை, கம்பு உள்ளிட்ட பல்வேறு விளைபொருள்களை வாங்கினா்.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, திருவெண்ணெய்நல்லூா், திண்டிவனம், அவலூா்பேட்டை, அரகண்டநல்லூா், வளத்தி, மரக்காணம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, தியாகதுருகம், திருநாவலூா், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், மணலூா்பேட்டை ஆகிய இடங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நெல், எள், தேங்காய், பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, கம்பு, ராகி, மணிலா, பச்சைப்பயிறு, சோளம் உள்ளிட்ட விளைபொருள்கள் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டன.
இவ்விரு மாவட்டங்களிலும் குறைந்தது ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடிவரை வா்த்தகம் நடைபெற்ாகவும், வரும் நாள்களில் இந்த வா்த்தகம் அதிகரிக்கக்கூடும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனா்.