அமைப்பு மாற்றம் டு வேட்பாளர் தேர்வு, மாநாடு! - 2026-க்குத் தயாராகும் விசிக!
ஓக்லா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செப்.30-இல் திறப்பு: ஆசியாவில் மிகப் பெரியது
ஓக்லாவில் புதிதாகக் கட்டப்பட்ட 12.4 கோடி காலன் கொள்ளவு கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன்கொண்ட நிலையத்தின் திறப்பு விழா செப்.30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைச் சிறப்பாக நடத்தும் பணியில் தில்லி ஜல் போர்டு திட்டமிட்டுள்ளது.
நாட்டில் மட்டும் அல்லாது ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறக்கும் நிகழ்ச்சியில் ஜப்பான் குழுவினர் உள்பட 6,000 பேர் பங்கேற்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையத்தின் திறப்பு விழாவில் மத்திய உள்துறை அமித் ஷா, முதல்வர் ரேகா குப்தா, தில்லி நீர் துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் உள்ளிட்டோர் சிறப்பு விருந்திருனர்களாக பங்கேற்கின்றனர்.
ஓக்லா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மத்திய அரசின் கங்கை தூய்மை தேசியத் திட்டம் மற்றும் தில்லி அரசின் தில்லி ஜல்போர்டு இணைந்து மேற்கொண்ட திட்டமாகும்.
இந்தத் திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (ஜேஐசிஏ) வழங்கியது. இதனால், ஜப்பானைச் சேர்ந்த குழுவினரும் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஓக்லா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இந்தியாவில் மட்டுமல்லாது, ஆசியாவிலும் மிகப்பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும். திறப்பு நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தெற்கு தில்லியைச் சேர்ந்த மக்கள், எம்எல்ஏக்கள், பிற மக்கள்பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வர்.
ஜேஐசிஏ பிரதிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். கடந்த காலத்திலும், ஜப்பான் நாடாளுமன்றம், ஜப்பான் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் ஓக்லா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டனர் என்றனர் அதிகாரிகள்.
தொடக்கத்தில் 4 சிறிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், அவை இடிக்கப்பட்டு புதிய நிலையம் அமைக்கும் பணி கடந்த 2019-இல் தொடங்கியது. சுமார் 40 ஏக்கர் பரப்பில் ரூ.1,161.18 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த நிலையத்தின் கட்டுமானப் பணி கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. அப்போதிலிருந்து இந்த நிலையம் சோதனை முறையில் இயங்கி வந்தது.
தொடக்கத்தில் கரோனா பரவல், கட்டுமானத்துக்குத் தடை ஆகியவற்றால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டன.
முதலில் 2022-இல் பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. பின்னர், அந்த இலக்கு 2024-க்கு மாற்றப்பட்டு, இறுதியில் 2025-இல் அந்தப் பணிகள் முடிவடைந்துள்ளன.
சிவில் லைன்ஸ், பாஹர்கஞ்ச், வால்ட் சிட்டி, கிரீன் பார்க், லாஜ்பத் நகர், நியூ ஃபிரண்ட்ஸ் காலனி, சித்தரஞ்சன் பார்க், ஓக்லா, சரிதா விஹார் மற்றும் இந்த நிலையத்தைச் சுற்றி வசிக்கும் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.