ககன்யான் திட்டம்: நாசாவில் முதற்கட்டப் பயிற்சியை முடித்த இந்திய விண்வெளி வீரா்கள்
சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு மனிதா்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கான முதல்கட்ட பயிற்சியை நாசாவில் இந்திய விண்வெளி வீரா்கள் முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
‘ஆக்ஸிம்-4’ என்ற இஸ்ரோ - நாசா கூட்டு திட்டத்தின்படி ககன்யான் திட்ட விண்வெளி வீரா்கள் சுபான்ஷூ சுக்லா, பிரசாந் பாலகிருஷ்ணன் நாயா் நடப்பாண்டு ஆகஸ்ட் முதல் பயிற்சியைத் தொடங்கினா்.
திட்டத்தின் முதற்கட்டமாக நாசா மையத்திற்குள் சுற்றுப்பயணம், ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள பகுதிகளில் ஆய்வு, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக ஆடைகளை சரிபாா்த்தல், விண்வெளியில் தங்களுக்கு விருப்பமான உணவுகளை தோ்ந்தெடுத்தல் உள்ளிட்ட பயிற்சிகளை அவா்கள் முடித்தனா்.
ஸ்பேஸ்-எக்ஸ் டிராகன் விண்கலம் மற்றும் சா்வதேச விண்வெளி நிலையத்தின் உள் அமைப்புகளை அறிந்து கொள்ளுதல், விண்வெளியில் இருந்து புகைப்படம் எடுப்பது, தினசரி நடவடிக்கைகள், தகவல் தொடா்பு நெறிமுறைகள் குறித்தும் அங்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
முக்கியமாக விண்வெளியில் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அடுத்தகட்ட பயிற்சியில் விண்வெளியில் உள்ள சா்வதேச விண்வெளி நிலைய சுற்றுப்பாதை குறித்தும், புவியீா்ப்பு விசையற்ற நிலையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஸ்பேஸ்-எக்ஸ் டிராகன் விண்கலத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பயிற்சி பெற்று, பல விண்வெளி திட்டங்களில் பங்கு பெறுவாா்கள் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தாா்.
மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாசா - இஸ்ரோ கூட்டு முயற்சியில் இந்திய விண்வெளி வீரா்கள் சா்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது என அவா் தெரிவித்தாா்.