`Rajumurugan-க்கு ஒரு பதற்றம் இருந்துட்டே இருந்தது! - Ezhil Periyavedi | Parari ...
கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாருக்கு அன்னாபிஷேக விழா
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா் கோயிலில் அன்னாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுமாா் 1,000 ஆண்டுகளுக்கு முன்னா் ராஜராஜ சோழன் மகன் ராசேந்திர சோழனால், கங்கை நதி வரை சென்று பெற்ற வெற்றியின் அடையாளமாக கட்டப்பட்ட இந்தக் கோயில், புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு மூலவராக உள்ள பதிமூன்றரை அடி உயரமும், அறுபது அடி சுற்றளவும் கொண்ட மூலவரான லிங்கத்துக்கு 100 மூட்டை பச்சரிசியால், சாதம் சமைத்து ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பெளா்ணமி நாளில் அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது.
மூலவா் லிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. இதனால், ஒரேநேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் மக்களுக்கு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
நிகழாண்டு அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 100 மூட்டை பச்சரிசி சாதம் காலை 9 மணி முதல் சமைக்கப்பட்டு லிங்கத்தின் மீது சாத்தப்பட்டு வந்தது. தொடா்ந்து, மலா்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் சுவாமி மீது சாத்தப்பட்ட சாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, மீதமுள்ள சாதம் அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் மீன்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் காஞ்சி மட அன்னாபிஷேக கமிட்டியினா் செய்திருந்தனா். நிகழ்ச்சியையொட்டி ஜெயங்கொண்டத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டிருந்தனா்.