Kavin Honour Killing: 'யார் சொல்லி அந்தப் பொண்ணு வீடியோ வெளியிட்டுச்சு?'- Eviden...
`கங்கை முதல் கடாரம் வரை' - புலிக்கொடியை பார் எங்கும் பறக்கச் செய்த பேரரசன் ராஜேந்திர சோழன்
நம் இந்திய வரலாற்றில் அதுவரை எந்த அரசனும் செய்திராத செயலாகக் கடல் கடந்து சென்று பல தேசங்களை வெற்றி கொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் தோல்வி என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் வெற்றியை மட்டுமே வாகை சூடிய ஓர் பேரரசன் வாழ்ந்திருக்கிறான்.
ஆனால், இன்று சோழர்கள் என்று கூறியதுமே ராஜராஜ சோழன், தஞ்சை பெரிய கோவில் என்று கூறும் பலரில் எத்தனை பேருக்கு தெரியும் இந்தியா மட்டுமல்லாது கடல் கடந்து பல தேசங்களைக் கட்டி ஆண்டவன் ராஜேந்திர சோழன் என்று.

ராஜராஜ சோழனுக்கும் திரிபுவன மாதேவிக்கும் மகனாகப் பிறந்தான் மதுராந்தகன் எனும் ராஜேந்திர சோழன்.
தம் இளம் வயதிலேயே தன் பெரியப்பா ஆதித்த கரிகாலனைப் போலவே போர்க்களத்தில் பலத்திலும், போரிடுவதிலும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
ஒரு முறை ராஜராஜ சோழன், மான்ய கடக போரில் தோல்வியடைந்தபோது, மான்ய கடகத்தினை வெற்றி கொள்ளாமல் அரண்மனைக்குள் இனி நுழைய மாட்டேன் என்று சபதமெடுத்து அரண்மனை வாசலிலேயே தங்கி விடுகிறான்.
தந்தையின் சூளுரையினை கேட்ட படைத்தளபதியான மதுராந்தகன் தன்னுடைய தலைமையில் படைதிரட்டிச் சென்று தன் வாள் முனையில் மான்ய கடகத்தினை வெற்றி கொண்டு, அவ்வெற்றியினை தன் தந்தைக்குப் பரிசளித்தான்.
இவ்வாறு வாழ்வின் பாதி ஆயுளான 50 வயது வரை ராஜராஜ சோழனின் படையில் முதன்மை படைத் தளபதியாகவே இருந்து தன் வாள் கொண்டு பல நாடுகளை வென்று ராஜராஜ சோழன் பெயரில் பல தேசங்களில் புலி கொடியைப் பறக்கச் செய்தான் மதுராந்தகன்.
இதுமட்டுமல்லாமல் சோழ வரலாற்றிலேயே 50 வயது வரை இளவரச பட்டம் கூட சூட்டப்படாத சோழ அரசனும் மதுராந்தகனே.
அதேசமயம், அரசன் இருக்கும்போதே இணை அரசனாக முடிசூட்டப்பட்ட அரசனும் மதுராந்தகன்தான்.
ஆம், அதுவரை வெறும் படைத் தளபதியாகவே இருந்த மதுராந்தகன் தன்னுடைய 50-வது வயதில்தான் ராஜராஜ சோழனால் "அரசர்களுக்கெல்லாம் அரசன் மட்டுமல்ல, தேவர்களுக்குத் தேவன், ராஜா இந்திரன்" என ராஜேந்திர சோழன் என்று பட்டமளிக்கப்பட்டு இணையரசனாக முடிசூட்டப்பட்டார் மதுராந்தகன்.

பின்னர் தன் தந்தையுடன் இணைந்து இரண்டாண்டு காலம் இணையரசனாக ஆட்சி செய்கிறான்.
ராஜராஜ சோழன் இறந்த பிறகு அரசனாக அரியணை ஏறினார் ராஜேந்திர சோழன். (ராஜராஜ சோழன் தனது 25 வயதில் இளவரசனாகவும், 45 வயதில் அரசனாகவும் முடிசூடினார் என்பது குறிப்பிடத்தக்கது).
ராஜேந்திர சோழன், தன் தந்தையை போல் அல்லாமல் தன்னுடைய ஆட்சியின் தொடக்கத்திலேயே தன் மகன் ராஜாதிராஜனுக்கு (இவருக்கு மூத்தவரான ஜெயம்கொண்டான் சாளுக்கியர்களுடனான போரில் கொல்லப்பட்டார். ராஜேந்திர சோழனுக்கு அம்மங்கை என்ற மகளும் இருந்தார்) இளவரச பட்டம் சூட்டினார்.
பராந்தக சோழன் ஆட்சிக் காலத்திலேயே பாண்டியர்களின் தலைநகரான மதுரையைச் சோழர்கள் வென்றிருந்தாலும், எந்த அரசனும் அங்கு முடிசூட்டிக் கொள்ளவில்லை.
காரணம் சோழ மன்னனிடம் தோற்று ஓடிய பாண்டிய மன்னன் தங்களுடைய தேவேந்திர மணிமுடியை இலங்கை மன்னனிடம் ஒப்படைத்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டான்.
ராஜேந்திர சோழன் தான் அரசனான பிறகு கி.பி.1017-18 ல் இலங்கை மீது படையெடுத்துச் சென்று சிங்கள மன்னன் 5-ம் மகிந்தனை வென்றான்.
இலங்கையை வென்றதோடு மட்டுமல்லாமல், முன்னதாக இலங்கை மன்னனிடம் பாண்டிய மன்னன் ஒப்படைத்த தேவேந்திர மணி முடியையும் ராஜேந்திரச் சோழன் மீட்டு வந்தான்.

பின்னர் கி.பி.1019-ல் ராஜேந்திர சோழனின் படை, படைத்தளபதி அரையன் ராஜராஜன் தலைமையில் சோழ ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்திற்காகவும், செல்வ வளத்திற்காகவும் இந்தியாவின் வடதிசை நோக்கி திக் விஜயம் மேற்கொண்டது.
இதில் ராஜேந்திர சோழனின் படை, மன்னன் மகிபாலனின் படையுடன் கடும் போர் புரிந்து தற்போது ஒடிசா என அழைக்கப்படும் அன்றைய கலிங்கம் மற்றும் தண்டபுத்தி ராஜ்ஜியம் எனப் பல ராஜ்ஜியங்களை வென்றது.
சுமார் 2 ஆண்டுகள் நீடித்த இந்த திக் விஜயத்தில் வெற்றிகள் பல குவித்து நாடு திரும்பியது சோழர் படை.
ராஜேந்திரனின் இப்படை கங்கை வரை சென்று வெற்றி கொண்டமையால் அன்றிலிருந்து ராஜேந்திரச் சோழன் "கங்கை கொண்ட சோழன்" என்று வரலாற்றில் இன்று வரை அழைக்கப்படுகிறான்.
இன்று வரை வரலாற்றில் கடல் கடந்த போர்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் கடார போரினை கி.பி.1025-ல் ராஜேந்திரன் நிகழ்த்தினான்.
ராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் நல்லுறவில் இருந்தது ஸ்ரீவிஜய ராஜ்ஜியம். ஆனால், ராஜேந்திரனின் ஆட்சிக்காலத்தின் போது தெற்கு தாய்லாந்து மன்னனுக்கும், கம்போடியா மன்னனுக்கும் போர் மூள, ஸ்ரீவிஜய ராஜ்ஜிய மன்னனான சங்கரம விஜயதுங்கன் தாய்லாந்து மன்னனுக்கு உதவிபுரிந்தான்.
மறுபக்கம் கம்போடியா மன்னன் ராஜேந்திரனின் உதவியை நாடினான். இதனால் ராஜேந்திர சோழனுக்கும் சங்காரம் விஜயதுங்கனுக்கும் போர் மூண்டது.

இப்போருக்கு ராஜேந்திரனின் சோழர் படை "திரிசடை" மரக்கலங்களில் படை திரட்டி இந்திய பெருங்கடல் வழியாக சென்றது.
இப்படை போருக்குச் செல்லும் வழியிலுள்ள மலையூர், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளைக் கைப்பற்றி இறுதியில் சங்கரம விஜயதூங்கனை தோற்கடித்து முழு ஸ்ரீவிஜய ராஜ்ஜியத்தினையும் கைப்பற்றியது சோழர் படை.
இந்த வெற்றியின் காரணமாகவே `கடாரம் கொண்டான்’ என ராஜேந்திர சோழன் அழைக்கப்படுகிறான்.

இந்த வெற்றியின் மூலம் தென்கிழக்கு வணிக துறைமுகங்களைக் கைப்பற்றிய ராஜேந்திர சோழன், மேற்கத்திய நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையிலான கடல் வாணிபத்தில் பெரும் வலிமை மிக்க ராஜ்ஜியமாக விளங்கினான்.
இவ்வாறு ராஜேந்திர சோழன் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் வட இந்தியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளை வென்று பெரும் சோழ சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியிருந்தான்.
போரில் வெற்றி கொண்ட நாடுகளை அந்நாட்டு மன்னர்களிடமே ஒப்படைத்துவிட்டு சோழ ராஜ்ஜியத்தின் கீழ் ஆட்சி செய்ய வைத்தது ராஜேந்திரச் சோழனின் போற்றத்தக்க போர்க் குணங்களில் ஒன்றாகவும் உள்ளது.
ராஜேந்திர சோழனின் ஆட்சியானது போர்க்களத்தில் மட்டுமல்லாது நாட்டின் வேளாண் மற்றும் குடிமக்களின் வாழ்வாதாரத்திலும் ஒருசேரவே சிறப்பாக விளங்கியிருந்தது.
அதாவது ராஜேந்திரனின் ஆட்சிக்காலத்தில் மன்னரின் ஆணைப்படி நிர்மாணிக்கப்பட்ட குழுவினரால், நிலமுடையோர்களிடமிருந்து அவர்களின் நிலத்தில் விளைந்த தானியங்களைக் குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சரியான முறையில் வரியாக வசூலிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த வரியின் மூலம் சேர்த்து வைக்கப்பட்ட தானியங்கள் அண்டை நாட்டின் படையெடுப்பின் போதும், எதிர்பாராத வறட்சிகள் ஏற்படும்போதும் குடிமக்களை பஞ்சத்திலிருந்து மீட்டுள்ளது.

மேலும், நிலமற்றோர்கள் சோழர்களின் போர்படையில் வீரர்களாகவும், கோவில் மன்றாடிகளாகவும், பல தொழில் செய்வோர்களாகவும் இருந்துள்ளனர்.
இதில் கோவில் மன்றாடிகளின் பணி என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அக்காலகட்டங்களில் இறைவழிபாடு என்பது பரவலாக இருந்துள்ளதால் கோவில்களில் விளக்கேற்றுவதென்பது முக்கியமான ஒன்றாக இருந்துள்ளது.
இதற்கான நெய் உற்பத்திக்காகவே கோவில்களின் பெயர்களில் பல கால்நடைகள் நேர்ந்து விடப்பட்டிருந்தது.
இப்படி கோவிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளின் பராமரிப்பாளர்களே இந்த கோவில் மன்றாடிகள்.

ராஜேந்திரனின் ஆட்சிக்காலத்தில் ஆளுக்கு 48 பசுக்கள் வீதம் 59 மன்றாடிகளுக்கு 2,832 பசுக்கள், ஆளுக்கு 96 ஆடுகள் வீதம் 14 மன்றாடிகளிடம் 1,344 ஆடுகள், மற்றும் 5 மன்றாடிகளிடம் 30 எருமைகள், 300 ஆடுகள் என பெருவுடையார் கோவிலின் பெயரில் 7,498 கால்நடைகள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இதில் வரும் ஆடுகள் சாவா மூவா ஆடுகள் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. இப்படியாக மன்றாடிகளிடம் ஒப்படைக்கப்பட்ட கால்நடைகளிலிருந்து நாள் ஒன்றுக்கு ஓர் ஆழாக்கு நெய் கோவிலில் விளக்கேற்றுவதற்குப் பெறப்பட்டு வந்துள்ளது.
மேலும் நாளொன்றில் ஓர் ஆழாக்கு மேல் வரும் நெய்யினை மன்றாடிகளே பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற வழக்கமும் இருந்துள்ளது.
இதனை மேலோட்டமாக பார்க்காமல் கொஞ்சம் உற்று நோக்கினால், இத்தனை கால்நடைகளைப் பராமரிப்பதற்கு நிச்சயம் வளமான மேய்ச்சல் நிலங்கள் இருந்திருக்க வேண்டும்.
இந்த கால்நடைகளின் இயற்கை உரங்களின் மூலம் விவசாயமும் செழிப்பாக இருந்திருக்க வேண்டும். இதன் மூலம் ராஜேந்திரனின் ஆட்சியில் வேளாண்மையும் வளமாக இருந்திருக்கும் என்று நம்மால் அறிய முடிகிறது.
ஒரு நாட்டின் கோவில்கள் என்பவை வெறுமனே அந்நாட்டின் இறைவழிபாட்டினை மட்டும் வெளிப்படுத்துவதாக இருப்பதில்லை.
மாறாகக் கோவில்கள் அந்நாட்டின் வளம், பெருமை மற்றும் பலம் போன்றவற்றைத் தாங்கி நிற்பதாகவும் உள்ளது.
மேலும் கோவில்கள் அரசாட்சியின் நிர்வாகத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளது. இதற்கு ஓர் உதாரணமாக நம் ராஜ ராஜ சோழனையே கூறலாம்.
இவ்வாறே ராஜேந்திர சோழனும் தன் சோழ சாம்ராஜ்ஜியத்தின் வரலாற்றை இவ்வுலகுக்கு உணர்த்துவதற்காக புதிய தலைநகரையே உருவாக்க நினைத்தான்.

அதில் தஞ்சை பெரிய கோவிலின் அச்சு அசலாகவும், அதை விட சிறந்ததாகவும் ஒரு கோவிலை எழுப்புகிறான்.
அதுவரையில் எல்லா வகையிலும் சோழர்களின் தலைநகரமாகச் சிறந்து விளங்கிய தஞ்சையை விட்டுவிட்டு கி.பி.1023-ல் தஞ்சையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் ஜெயங்கொண்ட மண்டலத்தில் நீர் வளம், நில வளம், மலை வளம், அடர்ந்த காடுகள் என எந்தவொரு வளமையும் இல்லாத பொட்டால் காடு கட்டாந்தரை இடத்தை தேர்வு செய்து "கங்கைகொண்ட சோழபுரம்" எனும் பெயரில் புதிய தலைநகரை உருவாக்க தீர்மானித்தான்.
தன்னுடைய கங்கை வெற்றியின் அடையாளமாகவே இத்தலைநகரத்திற்குக் `கங்கைகொண்ட சோழபுரம் என்று பெயரையும் தேர்வுசெய்தார்.
மேலும் இப்புதிய தலைநகரத்தில் தஞ்சை பெரிய கோயிலை விடவும் பெரிய கோயிலை எழுப்பவும் எண்ணியிருந்தார் ராஜேந்திரன்.
ஆனால், கங்கை கொண்ட சோழபுரமோ தஞ்சையைப் திடமான நில அமைப்பைக் கொண்டிருக்கவில்லை.
இதன் காரணமாகவே இங்கு கோயிலின் விமானம் 132 முழ உயரத்தில் அமைக்கப்பட்டது.
ஆனால், இக்கோயிலின் விமானமானது தஞ்சை பெரிய கோவிலின் விமானத்தை விடவும் அகலமானது.
இக்கோயிலின் கருவறையில் உள்ள லிங்கமானது 10 முழம் உயரமும், 2 முழம் குறுக்களவும் கொண்ட ஒற்றைக்கல்லால் ஆன லிங்கமாகும்.

மேலும் கோயில் கருவறையானது எல்லா சூழ்நிலையிலும் குளிர்ச்சியாக இருக்கும்படியாக சந்திர காந்த கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக தஞ்சை கோயிலுக்கு இல்லாத சிறப்பாக இக்கோயிலில் இறைவி சிலையையும் அமைக்கச் செய்தான் ராஜேந்திரன்.
மேலும் கோயிலின் கருவறை பார்வை படுமாறு நேராக வெளியில் நந்தி சிலை ஒன்று உள்ளது.
நந்தி சிலைக்கு வலது புறமாக வற்றாத கங்கை என அழைக்கப்படும் சிம்மகேணி உள்ளது.
இக்கிணற்றின் வெளித்தோற்றம் சிங்க முகத்தைப் போல அமைக்கப்பட்டிருப்பதால் இதனை சிம்மகேணி என்று கூறுவர்.
இக்கோவிலின் வட புற வாயிலின் கிழக்கு சுவரின் இறுதியில் சிவனும், சிவன் பதியும் கோவில் நிர்வாகத்தினை சண்டேசுவரருக்கு அளித்து முடிசூட்டுமாறு சிலை ஒன்று உள்ளது.
இப்படிப்பட்ட பல்வேறு சிறப்பியல்புகளால் UNESCO-வின் உலக மரபு சின்னமாகவும் இக்கோயில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
கோயிலின் வட திசையில் அரசர், அமைச்சர்கள், பிற அதிகாரிகள் எனக் கலந்தாலோசிக்கும் உட்கோட்டையும், தென் திசையில் அரண்மனையும், அரண்மனைக்கு அருகாமையில் காவல் வீரர்களின் குடியிருப்புகளும் அமைக்கப்பட்டது.
இப்படியாக முழு தலைநகரையும் கி.பி.1023-ல் தொடங்கி கி.பி.1025-ல் உருவாக்கிவிட்டனர்.
கோயில் மற்றும் தலைநகரின் முழு வரைபடமும் சோழ அமைச்சரவையின் மூத்த தச்சன் குஞ்சரமல்லனால் வடிவமைக்கப்பட்டதாகும். இந்தக் கோயில் மட்டுமல்லாது ஆந்திராவிலுள்ள மிக பிரசித்தி பெற்ற வாயு கடவுள் கோவிலும் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதே ஆகும்.

நீர் மேலாண்மையில் சோழர்கள் எந்த அளவிற்கு உயர்ந்திருந்தனர் என்பதை உலகுக்கே பறை சாற்றும் விதமாக 2,000 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை மற்றும் இந்தியாவின் பெரிய ஏரிகளில் ஒன்றான ராஜாதித்ய சோழனால் உருவாக்கப்பட்ட வீர நாராயண ஏரியைப் போல ராஜேந்திர சோழனும் கங்கை கொண்ட சோழபுரத்தில் இன்று பொன்னேரி என்று அழைக்கப்படும் `சோழகங்கம்' எனும் ஏரியை உருவாக்கினான்.
இந்தப் பொன்னேரியானது இந்தியாவின் பழமை வாழ்ந்த ஏரிகளின் ஒன்றாகும். சுமார் 16 மைல் பரந்த சுற்றளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் ஏறத்தாழ 4,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெற்றிருந்துள்ளது.
செல்வ வளமான தஞ்சையை விட்டுவிட்டு கட்டாந்தரை பொட்டல் காட்டில் தலைநகர் எதற்கு என்று விமர்சித்தவர்கள் முன், எல்லாம் உள்ள ஒன்றிலிருந்து சிறந்ததை உருவாக்குவதை விட எந்தவொரு வளங்களும் இல்லாத பொட்டல் காட்டில் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத மாபெரும் தலைநகரை உருவாக்கி உலக வரலாற்றில் சோழ சாம்ராஜ்ஜியத்தை ஒப்பில்லாத உயரத்தில் வைத்தான் ராஜேந்திர சோழன்.

கி.பி. 1044-ல் தன்னுடைய 82-ஆவது வயதில் இறுதியாக வரலாற்றில் யாரும் நிரப்ப முடியாத ஓர் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டு இவ்வுலகை விட்டுப் பிரிந்தான் சோழ ராஜ்ஜியத்தின் தன்னிகரில்லா பேரரசன் ராஜேந்திர சோழன்.
என்ன தான் ராஜராஜன் சோழன் எனும் ஆலமரத்தின் விழுதாகத் தோன்றினாலும், அதுவரையில் எந்த சோழ அரசனும் செய்திராத கடல் கடந்த போர் வெற்றிகளையும், தனக்குப் பின் யாரும் நிகழ்த்த முடியாத வெற்றி எனும் பாதையை மட்டுமே உருவாக்கிய ராஜேந்திர சோழன் ஓர் விழுதல்ல, வீழாமல் ஆண்ட ஆலமரம்!