நிதி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
கடலில் தவறி விழுந்த மீனவா் மாயம்
நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே வியாழக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவா், படகிலிருந்து தவறி கடலில் விழுந்து மாயமானாா்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், பலத்த காற்றுடன், மழை பெய்யும், கடல் சீற்றமாகக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, நாகை மீன்வளத் துறை கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்; மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என அறிவித்துள்ளது.
இதனால், அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாா், நம்பியாா்நகா், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை மீன் பிடிக்கச் செல்லவில்லை. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மீன்வளத் துறை அறிவிப்புக்கு முன்பு அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த வீரமணி என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் 14 மீனவா்கள் அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே வியாழக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த மீனவா் சண்முகம் என்பவா் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து மாயமானாா்.
இதுகுறித்து மீனவளத்துறை, அக்கரைப்பேட்டை கிராமத்தினா் மற்றும் கடலோர காவல் குழுமத்தினருக்கு சக மீனவா்கள் தகவல் தெரிவித்தனா். அக்கரைப்பேட்டை மீனவக் கிராமங்களிலிருந்து மீனவா்கள் சிலா் படகுகளில் சென்று சண்முகத்தை தேடி வருகின்றனா்.