வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்படும்: கெவின் பீட்டர்சன்
கடலூர்: ``மரங்களை வெட்டி வீழ்த்துவது கண்டிக்கத்தக்கது!'' – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டம்
தைப்பூசத்தையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது இந்து சமய அறநிலையத்துறை. அப்போது பெருவெளியில் இருக்கும் மரங்கள் வெட்டப்படுவதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.
இதுகுறித்து பா.ம.க தலைவர் அன்புமணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், `வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளியைச் சுற்றி நன்கு வளர்ந்த நிலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மரங்களை, இராட்சத எந்திரங்களைக் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
பெருவெளி பகுதியில் நிழல் தரும் வகையில் வளர்ந்திருந்த அந்த மரங்கள், காரணமே இல்லாமல் வெட்டி வீழ்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது. பிப்ரவரி 11-ம் தேதி தைப்பூச பெருவிழா நடைபெற உள்ள நிலையில், அடிப்படை வசதிகளை செய்வதற்காகத்தான் மரங்கள் பிடுங்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை கூறுவதை ஏற்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசப் பெருவிழா கொண்டாடப்படும் நிலையில் எந்த ஆண்டும் இது போல் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதில்லை.
அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு மட்டும் மரங்களை வெட்ட வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது ? 10 முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினாலும், இடையூறு இல்லாமல் ஜோதி தரிசனம் காண்பதற்கு வசதியாகத்தான் பெருவெளியில் எந்த ஆக்கிரமிப்பும் செய்யக் கூடாது என்று வள்ளலாரே கூறியிருக்கிறார். அதன்படியே இதுவரை பராமரிக்கப்பட்டும் வந்தது. அந்த பெருவெளியை வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்காக ஆக்கிரமித்து விட்டு, கூடுதல் வசதிகளை செய்து தருவதாகக் கூறி மரங்களை அகற்றுவது முரண்பாடுகளின் உச்சம்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியதாக வள்ளலார் கூறியிருக்கிறார். அவரது நிலத்தில் வளர்ந்திருந்த மரங்களை வெட்டி வீழ்த்துவது வள்ளலாரால் வெறுக்கப்பட்ட உயிர்க்கொலை ஆகும். வள்ளலாரை மதிக்கும் அரசாக இருந்தால் சத்திய ஞானசபை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்; அந்தப் பகுதியில் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.