நான்தான் சிறந்தவன்..! ரொனால்டோவின் ஆணவப் பேச்சு!
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகத்திலேயே நான்தான் சிறந்தவன் எனப் பேசியுள்ளார்.
39 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 923 கோல்கள் அடித்துள்ளார். கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவராக அறியப்படுகிறார்.
தற்போது, ரொனால்டோ அல் நசீர் அணிக்காக சௌதி கிளப்பில் விளையாடி வருகிறார். திங்கள் கிழமை போட்டியில் இந்த அணி 4-0 என வென்றது.
லயோனல் மெஸ்ஸி, ரொனால்டோ யார் சிறந்த வீரர் (கோட்) என்ற விவாதம் அடிக்கடி ரசிகர்களிடையேயும் வீரர்களிடமும் ஏற்படும்.
5 முறை பேலன்தோர் விருது பெற்ற ரொனால்டோ சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியதாவது:
நான்தான் சிறந்தவன்
வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் யார்? முற்றுப் புள்ளி.
வரலாற்றில் தலையில், இடது கால்களில், பெனால்டியில், ஃபிரி கிக்கில் அதிக கோல்கள் அடித்தவர் யார்? நான் இன்னொருநாள் பார்த்தேன். நான் இடதுகால் பழக்கம் இல்லாவிட்டாலும் அதில் டாப் 10 வரிசைக்குள் இருக்கிறேன். தலை, வலது கால், பெனால்டியில் எல்லாம் நான்தானே முதலிடத்தில் இருக்கிறேன்.
நான் எண்ணிக்கைக் குறித்து பேசுகிறேன். நான்தான் இருப்பதிலேயே முழுமையான வீரர் என நினைக்கிறேன். என்னுடைய கருத்தில் நான்தான் ஹெட்டர், பெனால்டி, ஃபிரி கிக் என எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்கிறேன்.வேகமாகவும், வலுவாகவும் இருக்கிறேன்.
நான் வித்தியாசமானவன்
உங்களுக்கு மெஸ்ஸி, பீலே, மாரடோனாவை பிடிக்கிறதென்றால் எனக்கு புரிகிறது. நான் அதை மதிக்கிறேன். ஆனால், நான்தான் மிகவும் முழுமையான வீரர். என்னைவிட சிறந்த ஒருவரை நான் பார்க்கவில்லை. நான் இதை எனது இதயத்தில் இருந்து சொல்கிறேன்.
நான் அதிகமான விளையாடுவதால் நான் என்ன சாதித்துள்ளேன் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறேன். ஏனெனில் அது நான் மேலும் சிறப்பாக செயல்பட அது எனக்கு ஊக்கமளிக்கிறது. அதுதான் எனக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம். என்னுடைய இடத்தில் யாரவது இருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பே கால்பந்தில் இருந்து விலகி இருப்பார்கள். நான் வித்தியாசமானவன், முற்றுப் புள்ளி.
மக்களுக்கு சௌதி லீக் பற்றி எதுவும் தெரியாது. அதனால் அவர்கள் அதிகமாக தங்களது கருத்தினை கூறுகிறார்கள். அரேபியா, அமெரிக்கா குறித்து அவர்கள் வித்தியாசமாக பேசுவார்கள். (எம்எல்எஸ்?) ஆமாம், அரேபியாவை மட்டும் அவமதிப்பார்கள். மக்கள் தாங்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியாது என்றார்.