வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்படும்: கெவின் பீட்டர்சன்
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து 1.55 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
தகுதி அற்றவர்களாக கருதப்பட்டவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியுடையவர்கள் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த தேசிய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் கமலேஷ் பாஸ்வான் தெரிவித்ததாவது,
''2022 - 23 நிதியாண்டில் 86,17,887 பேரும், 2023 - 24 நிதியாண்டில் 68,86,532 பேரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த இரு நிதியாண்டுகளிலும் சேர்த்து 1,55,04,419 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
போலி அட்டை அல்லது நகல், தவறான வேலை அட்டை, கிராம பஞ்சாயத்திலிருந்து நிரந்தரமாக வீடு மாறியது மற்றும் நகர்ப்புற எல்லைக்குட்பட்ட குடியிருப்பில் இருப்பது போன்ற காரணங்களால் தகுதியற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தை செயல்படுத்துவது மாநில அல்லது யூனியன் பிரதேச அரசின் பொறுப்பாக உள்ளது. வேலை அட்டைகளை நீக்குவது அல்லது புதுப்பிப்பது மாநில அரசின் வழக்கமான பொறுப்பாகும்.
இதேவேளையில் தகுதியான வேலை அட்டைகள் நீக்கப்படவில்லை என்பதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த பாஸ்வான், மொத்தமுள்ள 13.41 கோடி வேலையாள்களில் 13.34 கோடி பேரின் ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து வேலை செய்துவருபவர்களை நீக்குவது அல்லது மீண்டும் சேர்த்துக்கொள்வது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் கொடுக்கப்படுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ. 2,300 கோடி வருவாய்: மோடி பதிலுரை