வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்படும்: கெவின் பீட்டர்சன்
வாக்குச்சாவடி முறைகேடுகளை கண்டறிய ஆம் ஆத்மியின் தன்னார்வலர் குழு!
தில்லி பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடி முறைகேடுகள் நடைபெறுவதைக் கண்டறிய ஆம் ஆத்மி கட்சி தன்னார்வலர் குழுக்களை அமைத்துள்ளது.
தில்லி பேரவைத் தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. தில்லி பேரவைத் தோ்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், வாக்குச் சாவடி அமைப்புகளைச் சரிபார்க்கவும், தலைமை அதிகாரியின் விவரங்களைச் சரிபார்க்கவும், வாக்குப்பதிவு நாளில் கட்டுப்பாடுகளைக் கண்காணிக்கவும் ஆம் ஆத்மி கட்சி தன்னார்வலர்கள் குழுக்களை அமைத்துள்ளது.
இதையும் படியுங்கள் | தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ. 2,300 கோடி வருவாய்: மோடி பதிலுரை
இது குறித்து ஆம் ஆத்மி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “வாக்களிப்பு நடைமுறைகளைச் சரிபார்க்கவும், முறைகேடுகளைச் சரிபார்க்கவும், மோசடிகளுக்கும் எதிராக விழிப்புடன் இருக்கவும் தனது பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடி விவரங்களைச் சரிபார்க்கவும், நியமிக்கப்பட்ட தலைமை அதிகாரிகளை உறுதிப்படுத்தவும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவின் முடிவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பேட்டரி சதவீதத்தையும் தன்னார்வலர்கள் கண்காணித்து ஏதேனும் முரண்பாடுகளைக் கண்டறிவார்கள்.
தேர்தல் நாளான புதன்கிழமை இரவு, வாக்குப்பதிவு முடிந்ததும், இந்தத் தரவுகள் அனைத்தும் பதிவேற்றப்படும் ஒரு வலை போர்ட்டலையும் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் 70 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமையும், வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமையும் நடைபெறவிருக்கிறது.