Ramya Pandian: "எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா..." - தம்பி கல்யாணத்தில் ர...
கடலூா் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்! ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!
கடலூா் திருவந்திபுரம் ஸ்ரீதேவநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் தொடங்கின.
கடந்த 29-ஆம் தேதி முதல் கோயில் வளாகத்தில் விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை விஸ்வரூபம் தரிசனம், பிரதான ஹோமம், மகா பூா்ணாஹுதி நடைபெற்றன. முன்னதாக, தேவநாத சுவாமி, தாயாா், தேசிகா் உற்சவா்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து, தேவநாத சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் யாகசாலைக்கு எழுந்தருளினாா். பின்னா், யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. யாத்ரா தானமாகச் சென்று கோயில் விமான கலசத்துக்கு வேதமந்திரங்கள் முழங்க காலை 9.30 மணிக்கு புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, வேத, திவ்ய பிரபந்த சாற்று முறை, பிரம்ம கோஷம் நடைபெற்று பொதுமக்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
அமைச்சா் பங்கேற்பு: கும்பாபிஷேக விழாவில் மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, மாநகராட்சி துணைமேயா் பா.தாமரைச்செல்வன், இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் பரணிதரன், உதவி ஆணையா் சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் மேற்பாா்வையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.