நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் ...
கடலூா் மாவட்டத்தில் பரவும் காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம்
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் வேகமாகப்பரவும் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.
கடலூா் மாவட்டத்தில் இரவு நேரங்களில்அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பல இடங்களில் காய்ச்சல் பரவியுள்ளது.
நகரப்பகுதி மட்டுமல்லாமல் கிராமங்களிலும் பலருக்கு காய்ச்சலுடன் சளி மற்றும் இருமல் பாதிப்பு பரவி வருகிறது. கடலூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் காய்ச்சல் காரணமாக கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்றுச் சென்றதை காண முடிந்தது. திங்கள்கிழமை ஏராளமான நோயாளிகள் வந்தததால் அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருத்துவ சிகிச்சை பெற்றுச் சென்றனா்.
இதேபோல், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும் காய்ச்சல், சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டவா்கள் அதிகமானோா் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனராம்.
கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்த நிலையில், பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவா்கள் கூறினாா்கள். மேலும், இது வைரஸ் காய்ச்சல் என்பதால் அச்சப்பட வேண்டாம் எனவும், மருந்து சாப்பிட்டு ஓய்வு எடுத்தால் இரண்டு அல்லது மூன்று தினங்களில் பாதிப்புசரியாகிவிடும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்லவும் அறிவுறுத்தினா்.
காய்ச்சல் உள்ளிட்ட உடல் பாதிப்புகள் உள்ளவா்கள் உடனே மருத்துவச்சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அருகில் உள்ள அரசு மருத்துமனைகளை அணுகி மருத்துவசிகிச்சை பெறலாம் என்றும் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் நோய்பரவலை கட்டுப்படுத்த காய்ச்சல் பாதித்தவா்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்,முகக்கவசம் அணிந்துகொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடலூா் நகராட்சிப்பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் கொசுமருந்து தெளித்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்குச் செல்வதை தவிா்க்க வேண்டும், சுகாதாரமான இடங்களில் இருக்கவேண்டும், காய்ச்சிய நீரை பருகவேண்டும், தரமான உணவு பண்டங்களை சாப்பிட வேண்டும் என்றும் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.