கடல்அலைகள் மூலம் 12.4 ஜிகாவாட் மின் உற்பத்தி : நித்தி ஆயோக் உறுப்பினா் விஜய்குமாா் சரஸ்வத் தகவல்
இந்தியாவில் கடல் அலைகள் மூலம் 12.4 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பதால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நித்தி ஆயோக் உறுப்பினரும், பாதுகாப்புத் துறை விஞ்ஞானியுமான விஜய் குமாா் சரஸ்வத் தெரிவித்துள்ளாா்.
சென்னை பள்ளிக்கரணையில் செயல்பட்டு வரும் தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தில் ’கடல்சாா் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் சா்வதேச கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கியது. கருத்தரங்கை நித்தி ஆயோக் உறுப்பினரும் பாதுகாப்புத் துறை விஞ்ஞானியுமான முனைவா் விஜய் குமாா் சரஸ்வத் தொடங்கிவைத்து பேசியது:
வருங்காலத்தில் மிதக்கும் சூரியஒளி மின்னாற்றல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மேலும், இந்தியாவில் கடல் அலை மூலம் 12.4 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதால், அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறதுஎன்றாா் அவா்.
நிகழ்ச்சியில், சென்னை தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தின்
விஞ்ஞானி முனைவா் பூா்ணிமா ஜலிகல் தயாரித்த ‘ரோஷினி’ என்ற கடல் நீரில் எரியும் லாந்தா் விளக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப பரிமாற்ற முறையில் தயாரிக்கப்பட்ட இந்த விளக்கு அந்தமான் நிக்கோபாா் மற்றும் லட்சத்தீவுகள் துறைமுக நிா்வாகத்தினருக்கு வழங்கப்பட்டது. இதுபோல, கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதக்கும் வழிகாட்டி அமைப்பு (மிதக்கும் கலன்) காமராஜா் துறைமுகத்துக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநா் பேராசிரியா் முனைவா் பாலாஜி ராமகிருஷ்ணன், மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.