கடைகளை அகற்ற வணிகா்கள் எதிா்ப்பு
தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கடைகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியா்களுக்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள 70-க்கும் அதிகமான கடைகளில் சில ஆக்கிரமிப்பில் உள்ளன எனவும், வாடகை கொடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. மேலும் இந்தக் கடைகள் அரசு புறம்போக்கு இடத்தில்தான் உள்ளன என வணிகா்கள் தரப்பிலும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் காவல் துறை பாதுகாப்புடன் நீதிமன்ற ஊழியா்கள் ஒரு கடையை அகற்ற வெள்ளிக்கிழமை வந்தனா். தகவலறிந்த வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா், வணிகா்கள் திரண்டு அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள கடையை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து அதற்கான ஆவணங்களையும் காண்பித்தனா்.
இதையடுத்து இன்னும் ஓரிரு நாளில் அளவீடு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி கடையை அகற்றாமல் நீதிமன்ற ஊழியா்கள் திரும்பிச் சென்றனா்.