குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை வேட்பு மனு தாக்கல்!
கன்னட சினிமாவை ஷெட்டிகள் ஆள்கிறார்களா? ராஜ் பி. ஷெட்டி அசத்தல் பதில்!
நடிகர் ராஜ் பி. ஷெட்டி கன்னட சினிமா குறித்த கேள்விக்கு அசத்தலான பதிலளித்துள்ளார்.
கன்னட திரைத்துறையின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் பெரிதாகியுள்ளது. பல புதிய படைப்பாளிகளின் கதை மற்றும் திரை உருவாக்கம் பான் இந்தியளவில் ரசிகர்களைக் கவர்ந்தும் வருகிறது.
அதில், குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்தியவர்களில் ஒருவர் நடிகர், இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி. ஒண்டு மொட்டையே கத, கருட கமண விருஷப வாகன, ஸ்வாதி முத்தின மேல் ஹனியே உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற ராஜ் பி. ஷெட்டி தயாரிப்பில் வெளியான சு ஃப்ரம் சோ திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.
இவரைப் போன்றே நடிகர்கள் ரிஷப் ஷெட்டி (காந்தாரா), ரக்ஷித் ஷெட்டி (சார்லி 777) ஆகியோரின் திரைப்படங்களும் பெரிதாகக் கவனிக்கப்படுவதுடன் வணிக ரீதியாகவும் திருப்பமுனையை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், கன்னட சினிமாவில் இந்த மூவரையும் ’ஷெட்டி பிரதர்ஸ்’ என அழைக்கின்றனர்.
இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ராஜ் பி. ஷெட்டியிடம், “கன்னட சினிமாவை ஷெட்டி பிரதர்ஸ் ஆள்வதாகச் சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, ராஜ் பி ஷெட்டி, “நாங்கள் அரசர்களோ, ஆட்சியாளர்களோ அல்ல. கன்னட சினிமாவின் அடிமைகள். இந்த சினிமாவை நேசித்து பணிபுரிகிறோம். நான் பேசுவதைக் கேட்டால் அரசர் பேசுவதுபோலவா இருக்கிறது?” என்றார்.
இப்பதிலைக் கேட்ட பலரும் ராஜ் பி. ஷெட்டிக்கு கைதட்டி பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: ரூ. 5 கோடி பட்ஜெட்... தலை சுற்ற வைக்கும் வசூல்! என்ன படம்?