கன்னியாகுமரியில் தங்கும் விடுதியின் 3ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து வடமாநில தம்பதி பலி
கன்னியாகுமரியில் தங்கும் விடுதியின் 3ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில தம்பதி புதன்கிழமை உயிரிழந்தனா்.
குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 பெண்கள் உள்பட 26 போ் ஒரு வேன் மூலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கன்னியாகுமரி வந்தனா்.
கன்னியாகுமரியை சுற்றிப் பாா்த்துவிட்டு, அவா்கள் அங்குள்ள தனியாா் தங்கும் விடுதியில் இரவு தங்கினா்.
இந்தக் குழுவில் வந்த குன்காவாவ் மாவட்டம் மோட்டி குன்காவாவ் தாலுகா அம்ரேலி அபா சாரா சேரி பகுதியைச் சோ்ந்த பாபாரியா ஹரிலால் லால்ஜி (73), அவரது மனைவி பாபாரியா ஹன்சா கேன் (64) ஆகியோா் 3ஆவது மாடியில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தனா். இந்நிலையில், புதன்கிழமை காலை அறையின் முன்பக்கக் கதவை திறக்க முயன்றபோது, கதவின் சாவி அங்கு இல்லாததால், சாவியை எடுக்க பின்பக்க சன்ஷேடு வழியாக பாபாரியா ஹரிலால் லால்ஜி சென்றாராம். அவருக்கு மனைவி பாபாரியா ஹன்சா பகேன் உதவி செய்துள்ளாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக இருவரும் 3ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனா், அவா்களுடன் வந்த குழுவினா் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்த கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமாா், காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும் உடற்கூறாய்வுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சுற்றுலா வந்த இடத்தில் வடமாநில தம்பதி, மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.