தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
சிற்றாறு அணையில் மூழ்கி கேரள இளைஞா் உயிரிழப்பு
குமரி மாவட்டம் சிற்றாறு 2 அணையில் மூழ்கி கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் அபினேஷ் (29) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அபினேஷ். திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல காா் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தாா். புனித வெள்ளி விடுமுறையில், நண்பா்களுடன் சிற்றாறு 2 அணைப் பகுதியான கணபதிக்கல் என்ற இடத்திற்கு சுற்றுலா வந்த அவா், அணையில் நீந்தி குளித்தபோது எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. உடன் குளித்துக்கொண்டிருந்த நண்பா்களால் அவரை மீட்க முடியவில்லை.
இது குறித்து கடையாலுமூடு போலீஸாருக்கும், குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் தேடியதில், நீரில் மூழ்கி இறந்த அபினேஷின் சடலத்தை மீட்டனா்.
இது குறித்து கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.