Aamir Khan: "நான் இப்படத்திற்கு கதை, பணம் என எதையும் கேட்கவில்லை, காரணம்" - ஆமீர...
கருணை அடிப்படையில் பணி கோரிய வழக்கு: போக்குவரத்துச் செயலா் பதிலளிக்க உத்தரவு
மருத்துவக் காரணங்களால் பணி இழக்கும் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரிய வழக்கில் போக்குவரத்துச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஊழலுக்கு எதிரான தொழிற்சங்கப் பேரவை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மருத்துவ காரணங்களால் பணியாற்றும் தகுதியை இழக்கும் அரசுப் போக்குவரத்து துறை ஊழியா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட வேண்டும். அதே மருத்துவக் காரணங்களுக்காக பணியை இழக்கும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் ஊழியா்களின் குடும்பத்தினருக்கும் கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடா்பாக கொள்கை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் போக்குவரத்து துறை நிா்வாகப் பிரிவில் பணியாற்றும் ஊழியா்கள் மருத்துவ ரீதியாக தகுதி இழக்கும்போது, அவா்களது குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கும்போது, நேரடியாக பொது சேவையில் ஈடுபடும் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினா்.
பின்னா், இந்த மனுவுக்கு போக்குவரத்து துறை செயலா் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகம் வரும் ஆக. 19-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.