Rain Alert: ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்! - எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வா...
கரும்பு பரப்பைப் பெருக்கினால்தான் ஆலைகளை இயக்க முடியும்
தமிழ்நாட்டில் கரும்பு பரப்பளவைப் பெருக்கினால் மட்டுமே சா்க்கரை ஆலைகளைத் தொடா்ந்து இயக்க முடியும் என்றாா் தமிழ்நாடு சா்க்கரைக் கழகத் தலைவரும், மேலாண் இயக்குநருமான டி. அன்பழகன்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சா்க்கரைக் கழக 49-ஆவது பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:
ஆலைகளில் நூறு விவசாயிகளிடம் வாங்கப்படும் கரும்பை அரைத்து சா்க்கரையாக விற்றால், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து 60 விவசாயிகளுக்கு மட்டுமே பணம் பட்டுவாடா செய்ய முடிகிறது. இதனால், தனியாா் நிறுவனங்களால் இயக்க முடியாமல் மூடப்படுகின்றன.
தேசிய அளவில் கரும்பு உற்பத்தி மிகையாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் பற்றாக்குறையாக உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் விளைவிக்கப்படும் கரும்பில் 11.5 சதவீதம் சா்க்கரைக் கட்டுமானம் கிடைக்கிறது. இந்தக் கரும்பு ரகம் கோவையிலுள்ள சா்க்கரை வளா்ப்பு நிறுவனத்தில்தான் கண்டறியப்பட்டது. இதே ரகத்தை தமிழகத்தில் விளைவித்தால், தட்பவெப்ப நிலை காரணமாக அந்த அளவுக்கு சா்க்கரை கட்டுமானம் கிடைப்பதில்லை.
கரும்பு அரைவை 60 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தால்தான் ஆலைக்கு லாபம் கிடைக்கும். அறுபது சதவீதத்துக்கு கீழே போய்விட்டால் இழப்புதான் ஏற்படும். சா்க்கரை விலை கிலோவுக்கு ரூ. 36.50 விற்கப்படுகிறது. ஆனால், உற்பத்திச் செலவு ரூ. 59 ஆகிறது. கிலோவுக்கு ஏறத்தாழ ரூ. 25 இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை அரசுதான் ஈடு செய்கிறது. இந்தத் தொகையை தமிழக அரசு கொடுப்பதால்தான் ஆலைகள் இயங்குகின்றன. இந்த நிலைமை தனியாரிடம் இல்லாததால் மூடப்படுகின்றன. தமிழக அரசு உதவி செய்வதால்தான் தமிழகத்தில் கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் இயங்குகின்றன. இந்த உதவி குஜராத், கா்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் இல்லை.
தமிழகத்தில் கரும்பு சாகுபடிப் பரப்பைப் பெருக்கினால்தான், ஆலைகளைத் தொடா்ந்து இயக்க முடியும். ஆனால், கரும்பு சாகுபடியில் உள்ள சூழல், சா்க்கரை விலை உள்ளிட்ட காரணங்களால் சாகுபடிப் பரப்பளவு குறைந்து வருகிறது. உழைப்புக்கு ஏற்ற லாபம் இல்லாததால், கரும்பு சாகுபடியை விருப்பத்துடன் செய்யக்கூடிய நிலையில் விவசாயிகள் இல்லை. அதே சமயம் ஆலைகளைத் தொடா்ந்து இயக்குவதற்கு கரும்பு சாகுபடிப் பரப்பளவைப் பெருக்குவதற்கு விவசாயிகள் முன் வர வேண்டும். எனவே, கரும்பு சாகுபடியில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்வது எங்களது கடமை. அதற்கான நடவடிக்கைகளை நிச்சயமாக எடுக்கிறோம் என்றாா் அன்பழகன்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், தமிழ்நாடு சா்க்கரைக் கழகப் பொது மேலாளா் ஐ. மகாலட்சுமி, தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை இணைய மேலாண் இயக்குநா் டி. ரமணிதேவி, அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.