உ.பி., கிராமத்தின் 78 வருடத் தவிப்பு; சோலார் விளக்கின் ஒளியில் கனவை நனவாக்கிய 10...
கருவுறாமைக்கு காரணங்கள் என்ன? சரிசெய்வது எப்படி?
தற்போதைய நவீன உலகத்தில் வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கம், உடல் செயல்பாடின்மை ஆகிய பொதுவான காரணங்களால் ஒரு பெண் கருவுறுதல் என்பது ஒரு சவாலான சிக்கலான விஷயமாக மாறி வருகிறது. அந்தக் காலத்தில் சாதாரணமாக நிகழ்ந்த கருவுறுதல் இந்தக் காலத்தில் பெரும்பாலானோருக்கு மருந்து, மாத்திரைகளின்றி நிகழ்வதில்லை. இதற்குக் காரணம் இன்றைய வாழ்க்கைமுறைதான் என்கின்றனர் மருத்துவர்கள்.
தாமதமாகத் திருமணம் செய்வது, குழந்தை பெறுதலைத் தள்ளிப்போடுவதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களாலும் கருவுறுதல் அசாதாரணமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
எனவே, இக்காலத்தில் ஒரு குழந்தையாவது பெற்றுவிடமாட்டோமா என பல தம்பதியர்கள் ஏக்கத்தில் இருக்கின்றனர். கருவுறாமையால் ஒரு பெண் மனரீதியாக பாதிக்கப்படுகிறார். எனவே, தம்பதிகளிடையே மனரீதியாக உளவியல் சிகிச்சை அளிப்பது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்துக் கருவுறுதலை ஊக்குவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கேரளம் அங்கமாலி அப்பல்லோ அட்லக்ஸ் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் லேகா கருவுறுதல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.
கருவுறாமை விகிதம் 1992-93ல் 22.4% ஆகவும் 2005-06ல் 25.3% ஆகவும் இருந்த நிலையில், 2015-16ல் இது 30.7% ஆக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தியாவில் கருவுறாமை அதிகரிப்பதற்கு என்ன காரணம்?
உலகளவில் கருவுறாமை வேகமாக அதிகரித்து வருகிறது. பல ஆண்டுகளாக சமூகத்திலும் சுகாதாரத்திலும் ஏற்படும் மாற்றங்களின் விளைவாகவே பார்க்கப்படுகிறது. தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதங்கள் குறைந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
இதற்கு முக்கியமான ஒரு காரணம் வயது. கடந்த பல பத்தாண்டுகளாக இந்தியாவில், குறிப்பாக நகர்ப்புறங்களில் திருமணத்தையும் கருவுறுதலையும் பெண்கள் தாமதப்படுத்தி வருகின்றனர். வயது அதிகமாகும்போது கருவுறுதல் விகிதம் குறைகிறது. 35 வயதிற்குப் பிறகு ஒரு பெண்ணின் கருமுட்டையின் தரம் மற்றும் கருமுட்டைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைகிறது. ஆண்களுக்கு 40 வயதிற்குப் பிறகு விந்தணுக்களின் தரம் குறையலாம். முதல்முறை எளிதாகக் கருத்தரிக்கும் தம்பதிகள் பின்னர் சவால்களை சந்திக்க நேரிடும்.
கருவுறாமைக்கு மாறிவரும் வாழ்க்கை முறை எவ்வாறு காரணமாகிறது?
கருவுறாமைக்கு வாழ்க்கை முறை மாற்றங்களும் ஒரு முக்கிய காரணமாகும். 1990களில் இருந்து வேகமான நகரமயமாக்கல், அதிகமாக உட்கார்ந்தே இருப்பது அதாவது உடல் செயல்பாடு இல்லாதது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது ஆகியவை இதில் அடங்கும். மேற்குறிப்பிட்ட காரணங்களால் உடல் பருமனும் தற்போது அதிகமாகிவிட்டது. இது கருவுறுதலுக்கு உதவும் ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் இது பொதுவானதாகும்.
இந்தக் காரணங்களுடன் புகைப்பிடித்தல், மது அருந்துதல், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவையும் கருவுறுதலில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. ஆண்களுக்கு இந்தக் காரணங்களால் விந்தணு எண்ணிக்கையையும் இயக்கத்தையும் குறைக்க வாய்ப்புள்ளது. பெண்களுக்கு இது பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

அடுத்து காற்று மாசுபாடு, பிளாஸ்டிக் மற்றும் பூச்சிக்கொல்லிகளில் இருந்து வெளியாகும் ரசாயனங்கள், தொற்றுகள் ஆகியவையும் கருவுறாமைக்கு குறிப்பிடத்தக்கக் காரணிகளாக இருக்கின்றன.
பாலியல் நோய்த்தொற்றுகள், மாதவிடாய் சுகாதாரத்தை பேணாதது, பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளும் கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இனப்பெருக்க உறுப்புகளை குறிப்பாக ஃபெலோபியன் குழாய்களை சேதப்படுத்தும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு கோளாறுகள் போன்றவற்றாலும் கருவுறுதலில் பாதிப்பு ஏற்படலாம். மேலும் பெண்களில் கர்ப்பப்பையிலும் ஆண்களில் விந்தணு உற்பத்தியிலும் பிரச்னைகள் இருக்கலாம்.
கருவுறாமை பிரச்னையை எவ்வாறு கையாள வேண்டும்?
உடல் எடையை சரியாக வைத்திருப்பது, சீரான சரிவிகித உணவுகளை எடுத்துக்கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது தேவை. யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபடுவது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
போதுமான தூக்கம், புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது, மது அருந்துதல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தவிர்ப்பதன் மூலமாக ஆரோக்கிய வாழ்க்கை முறையை பின்பற்றலாம். இதன் மூலம் படிப்படியாக கருவுறாமையை சரிசெய்யலாம்.
பெண்களுக்கு பிசிஓடி/ பிசிஓஎஸ், ஆண்களுக்கு ஒலிகோஸ்பெர்மியா பிரச்னைகளுக்கு சிகிச்சை என்ன?
பெண் கருவுறாமைக்கு அண்டவிடுப்பின் செயலிழப்பு அதாவது குறைபாடுள்ள கருமுட்டையை வெளியிடுவது முக்கிய காரணமாகும். இதற்கு பிசிஓஎஸ்தான் காரணம். இது கருவுறும் வயதுடைய பெண்களில் சுமார் 10% பேரை பாதிக்கிறது.
ஒலிகோஸ்பெர்மியா (விந்தணு எண்ணிக்கை குறைவது) ஆண்களைப் பாதிக்கிறது.
பெரும்பாலும் மனைவி கருவுறுதலின்போதுதான் ஆண்களுக்கு இது கண்டறியப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட காரணங்கள் அடங்கிய வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையின்மை அல்லது வெரிகோசெல்ஸ்(விதைப்பையின் உள்ளே நரம்புகள் பெரிதாகும் நிலை) ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படலாம். புகைப்பிடித்தல், மது அருந்துதல், சில குழந்தை பருவ நோய்த்தொற்றுகள், நீரிழிவு, வெரிகோசெல்ஸ் ஆகியவை விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும்.
எனவே தம்பதிகள் கருவுறுதலுக்கு முன்னதாக இதுபோன்ற பிரச்னைகள் இருக்கிறதா என சோதனை செய்துகொள்வது நல்லது.

கருவுறாமையால் ஏற்படும் மனச்சோர்வை தம்பதிகள் எவ்வாறு சமாளிப்பது?
குழந்தைக்கான ஏக்கம் எல்லாருக்கும் இருப்பதுதான். இத்துடன் சமூக எதிர்பார்ப்புகள், தனிப்பட்ட உணர்வுகள் எல்லாம் சேர்ந்து தம்பதிகளிடையே மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. துக்கம், குற்ற உணர்வு, உணர்ச்சி இல்லாமை என உளவியல்ரீதியாக சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே தம்பதிகளுக்கு இடையே உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது முக்கியமானது. இது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது, தனிமையை தவிர்க்கிறது. மேலும் தம்பதிகளுக்கு இடையே உள்ள உறவை வலுப்படுத்துகிறது. இதற்காக நிபுணர்களின் ஆலோசனைகள் அல்லது உளவியல் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். தம்பதிகள் இருவரும் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது மன அழுத்தம் குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சமீபத்திய ஆண்டுகளில் தொழில்நுட்பம், கருவுறுதல் அதிகரிப்பிற்கு உதவுகிறதா?
ஏஆர்டி எனும் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் கருவுறுதலுக்கு உதவுகின்றன. இதில் ஐவிஎப் எனும் செயற்கை கருத்தரிப்பு முறையில் இப்போது பெண்கள் அதிகம் தாய்மை அடைந்து குழந்தை பெற்றுக்கொள்கின்றனர்.
ஐசிஎஸ்ஐ எனும் ஒரே ஒரு விந்தணுவை கருப்பைக்குள் நேரடியாக செலுத்துவது, பிஜிடி எனும் கருப்பைக்குள் விந்தணுவை செலுத்துவதற்கு முன்பு மரபணு பரிசோதனை செய்வது ஆகிய பரிசோதனைகளால் மரபணு பிரச்னை, கருமுட்டை மற்றும் விந்து உறையும் அபாயத்தைக் குறைக்கிறது.