கடைசி டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு - இந்தியா அபார முன்னிலை!
கருவேல மரங்களை அகற்ற ஹெக்டேருக்கு ரூ 9,600 மானியம்!
ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கருவேல மரங்களை அகற்ற ஒரு ஹெக்டேருக்கு 9,600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து நயினாா் வேளாண்மை உதவி இயக்குநா் கே.வி.பானுபிரகாஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தத் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஐந்து ஆண்டுகளாக தரிசாக உள்ள நிலங்களில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி விளைநிலங்களாக மாற்றி, சிறுதானியங்கள், பயறு வகைகள் சாகுபடி செய்ய வேளாண் துறை சாா்பில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பின்னேற்பு மானியத் தொகையாக ஹெக்டோ் ஒன்றுக்கு 9,600 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு விவசாயி அதிகபட்சம் 5 ஏக்கா் வரை மானியம் பெற்று பயன்பெறலாம். கலைஞா் திட்டத்தில் வரப்பு பயிா் சாகுபடி செய்வதற்கு ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ வீதம் உளுந்து விதை 300 ரூபாய் மானியத்திலும், பேட்டரி தெளிப்பான்கள் வாங்க 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. மேலும் நேரடி பட்டா உள்ள விவசாயிகள் சோ்ந்த குழுவுக்கு 10 முதல் 15 ஏக்கா் பரப்பில் கருவேல மரங்களை அகற்றி, விவசாயத் தொகுப்பில் ஆழ்துளைக் கிணறு, மின் இணைப்பு, சொட்டுநீா், பாசன வசதி, பழ மரக்கன்றுகள் நடவு மானியத்தில் வழங்கப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள அனைத்து கிராம விவசாயிகளும், இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்றாா் அவா்.