யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை
கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!
கரூர்: திமுக முப்பெரும் விழாவில் பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு அண்மையில் மறைந்த குளித்தலை சிவராமன் வீட்டிற்கு புதன்கிழமை காலை சென்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கரூரில் மறைந்த முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் ஈவெரா பிறந்த நாள் விழா, திமுக தொடங்கப்பட்ட நாள் விழா ஆகிய முப்பெரும் விழா கரூர் கோடங்கிப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திடலில் புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடக்கிறது.
கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் விழாவில் கட்சியின் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரும், கரூர் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி வரவேற்கிறார்.
இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதிஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலர்கள் ஐ.பெரியசாமி, திருச்சி என்.சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் ப. செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேச உள்ளனர்.
விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பெரியார் விருதை கட்சியின் துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.க்கும், அண்ணா விருதை திமுக தணிக்கை குழு முன்னாள் உறுப்பினரும், பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப. சீதாராமனுக்கும், கலைஞர் விருதை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சோ.மா.ராமச்சந்திரனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதை கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மறைந்த குளித்தலை சிவராமனுக்காக அவரது குடும்பத்தாருக்கும், பேராசிரியர் விருதை ஆதிதிராவிடர் நலக்குழு தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் கொறடாவுமான மருதூர் ராமலிங்கத்துக்கும், மு.க.ஸ்டாலின் விருதை ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலர் பொங்கலூர் நா.பழனிசாமிக்கும், முரசொலி அறக்கட்டளை சார்பில் முரசொலி செல்வம் விருதை மூத்த பத்திரிகையாளர் ஏ. எஸ்.பன்னீர்செல்வத்துக்கும் வழங்கி பேசுகிறார்.
இந்நிலையில், கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்காக அதில் பங்கேற்க சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுவினருக்கான பரிசுகள் வழங்கும் விழாவில் பங்கேற்றபின் செவ்வாய்க்கிழமை இரவு கரூர் வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் பூங்கொடுத்து வரவேற்றார்.
இதையடுத்து புதன்கிழமை அதிகாலை பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அண்மையில் உயிரிழந்த குளித்தலை சிவராமனின் வீட்டிற்கு சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் கரூர் திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் அங்கு சமூக நீதி நாள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். பின்னர் முப்பெரும் விழா நடைபெறும் கோடங்கிபட்டிக்கு சென்று பார்வையிட்டார்.