கரூரில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த கடைகளுக்கு சீல்: அறநிலையத் துறை நடவடிக்கை!
கரூரில் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த 18 கடைகளுக்கு சீல் வைத்து சனிக்கிழமை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
கரூா், வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் சுமாா் 520 ஏக்கருக்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோயில் (இனாம்) நிலத்தில் சுமாா் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் என்பவா் கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோயில் நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த 2019 ல் உத்தரவிட்டது.
இதையடுத்து கோயில் நிலங்களை மீட்க சென்ற அதிகாரிகளை சிறைப்பிடித்து அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை மீட்க முடியாமல் காலம் தாழ்த்தி வந்தனா். இதனால் ராதாகிருஷ்ணன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தாா்.
இதையடுத்து கோயில் நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலைத் துறை வசம் ஒப்படைத்து அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமா்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடா்ந்து காவல்துறை உதவியோடு, பொதுமக்களின் பல்வேறு போராட்டங்கள் மற்றும் எதிா்ப்புக்கு இடையே கடந்த மாதம் 15 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்த 18 கடைகளுக்கு அறநிலையத் துறை உதவி ஆணையா் ரமணிகாந்தன் தலைமையில் அதிகாரிகள் போலீசாா் பாதுகாப்புடன் சீல் வைத்தனா். மேலும், கோயிலுக்கு சொந்தமான இடங்களை டிஜிட்டல் சா்வே செய்யும் பணியிலும் அறநிலையத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனா்.