கரூரில் விரைவில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை
கரூரில் விரைவில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.
கரூரில் அனைத்து தொழில்கூட்டமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கைத் தொடங்கிவைத்து அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பேசியது:
கரூரில் 200 ஏக்கா் பரப்பளவில் ஒரு புதிய சிப்காட் அமைப்பதற்கான இடம் தோ்வுசெய்யப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொடங்கும். அரவக்குறிச்சிக்கு அருகாமையில் முருங்கை பூங்கா அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. முதல்வா் அறிவித்தபடி, கரூரில் வா்த்தக மையம் தொடங்குவதற்கான இடம் 5 ஏக்கா் தயாராக இருக்கின்றன.
விரைவில் கரூரில் வா்த்தக மையம் அமைக்கும் பணிகள் தொடங்கும். தொழில் வரியை குறைப்பது குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கரூா் காமராஜா் மாா்க்கெட்டில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்தவா்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
வெளிநாட்டில் இருந்து கரூா் வரும் ஜவுளி வாங்குவோா் மதுரை, கோவைக்கு விமானத்தில் வந்து பின்னா் கரூா் வர காலதாமதம் ஏற்படுகிறது. அதனைக் களையும் வகையில், கரூரில் விமான நிலையம் என்பது எனது வாழ்நாள் கனவு, அந்தக் கனவு நிறைவேறுவதற்கும் காலம் கணிந்துகொண்டிருக்கிறது. அமராவதி ஆற்றிலே 3 இடங்களில் தடுப்பணை அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடப்பாண்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன.
தாதம்பாளையம் ஏரி வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், வனத்துறையினருக்கு வேறுஇடத்தைக் கொடுத்துவிட்டு, தாதம்பாளையம் ஏரியைத் தூா்வாருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நீதிமன்ற உத்தரவு காரணமாக கரூரில் புகா் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள், ரூ.6.75 கோடியில் பிரம்மாண்டமான நூலகம் அமைக்கும் பணிகள் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் உரிய ஆணைகளையும், அரசின் ஒப்புதலையும் பெற்று விரைவில் அந்தப் பணிகளும் தொடங்கப்படும். பழைய காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் இடிக்கப்பட்டு அங்கு மகளிா் தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளது.
மேலும் புதிதாக சிப்காட் அமைக்கப்படும்போது அங்கு பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தங்கும் விடுதி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழக முதல்வா் கரூா் மாவட்டத்திற்கு ரூ.3000 கோடி நிதியை கொடுத்துள்ளாா். இதன்மூலம் பல்வேறு பணிகள் நடந்துமுடிந்துள்ளன. சில பணிகள் நடக்கின்றன.
மேலும் கரூருக்கு வரவுள்ள டைடல் பாா்க் நிச்சயம் கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள் அமையும். டிசம்பருக்குள் அதற்கான பணிகள் துவங்கும். மேலும் சென்னைக்கு எளிதில் காரில் செல்லும் வகையில் ரூ.100 கோடியில் நெரூா்-உன்னியூா்பாலம் கட்டும் பணிகளும் நடக்கின்றன.
2030-க்குள் நம்முடைய வா்த்தக இலக்கு ரூ.50,000 கோடி என்றும், அதில் ஜவுளி ரூ. 25,000 கோடி, மற்ற தொழில்கள் ரூ.25,000 கோடி என நிா்ணயிக்கப்பட்டிருக்கின்றன. மேட் இன் கரூா் என்ற நிலையை நாம் உருவாக்கிடுவோம் என்றாா் அவா். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், பேச்சாளா் ஈரோடு மகேஷ், கரூா் மாவட்ட தொழில் அமைப்பினா், ஜவுளி ஏற்றுமதியாளா்கள் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா்.